துபாயில் தனது வேலையை இழந்து இந்தியாவிற்கு திரும்பிய ஒரு இந்தியரின் மனதை தொடும் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெடிட்டில் பகிரப்பட்டு தற்போது நீக்கப்பட்ட அந்தப் பதிவு, அதன் வெளிப்படையான உண்மையால் பலரையும் கவர்ந்துள்ளது.
தனது பதிவில், அந்த நபர் ஐந்து ஆண்டுகளாக அயராது உழைத்த பிறகு, மனிதவள துறையுடன் நடந்த எதிர்பாராத சந்திப்பு எப்படி தனது உலகத்தை தலைகீழாக மாற்றியது என்பதை விவரித்திருந்தார். அவர் உடனடியாக துபாயை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, அவரது அனுபவத்தை பற்றிய வெளிப்படையான சிந்தனை வாசகர்களை ஆழமாகப் பாதித்தது.
“இதை எப்படித் தட்டச்சு செய்யத் தொடங்குவது என்று கூட எனக்கு தெரியவில்லை. என் கைகள் நடுங்குகின்றன, கண்ணீர் திரையை மங்கலாக்குகிறது. ஐந்து ஆண்டுகளாக, துபாய் எனக்கு வீடாகவும், கனவாகவும், எல்லாமாகவும் இருந்தது. ஆனால் இப்போது, தனது சேமிப்பு அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில், வெறுங்கையுடனும் உடைந்த மனதுடனும் இந்தியாவிற்கு திரும்ப தயாராகிறேன்.
2019 இல் துபாய்க்கு சென்று, விடுமுறைகளை தவிர்த்து, கூடுதல் நேரம் வேலை செய்து, தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்பி, வேலையில் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். ஆனால் இவை அனைத்தும் ஒரு எதிர்பாராத சந்திப்புடன் திடீரென முடிவுக்கு வந்தது.
“குற்றவாளியைப் போல” பாதுகாப்பு ஊழியர்கள் என்னை வெளியே அழைத்து சென்றனர் ஐந்து வருட அர்ப்பணிப்பு அரை நிமிடத்தில் மறைந்துவிட்டது. கடந்த மாதம் எந்த முன்னறிவிப்பும் இன்றி, நிறுவனத்தின் மறுசீரமைப்பு என்று கூறி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, நூற்றுக்கணக்கான வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.
அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் வருமானம் இல்லாததால், வீட்டிற்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை. வாடகை செலுத்த வேண்டும் என்று கூறி, கூடுதல் அவகாசம் கோரி மனிதவள துறையிடம் கெஞ்சினேன். ஆனால் எனது கோரிக்கை மறுக்கப்பட்டது.
“துபாய் சம்பளம் பெரியதாக தோன்றுகிறது, ஆனால் வாடகை, மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், மளிகைப் பொருட்கள், வீட்டிலுள்ள சகோதரிக்கான பள்ளி கட்டணம், பெட்ரோல் அனைத்தும் ஒரு அரக்கனை போல பணத்தை விழுங்குகின்றன. செலவுக்காக என்னிடம் இருந்த சில பொருட்களை விற்றேன். ஒரு மெத்தை, ஒரு சிறிய தொலைக்காட்சி ஆகியவை இப்போது என்னிடம் இல்லை.
மனம் உடைந்திருந்தாலும், துபாய் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. காலை நேர கரக் சாயின் வாசனை, புர்ஜ் கலீஃபாவில் உள்ள அற்புதமான அழகான ஒளிக்காட்சி, ஷேக் சயீத் சாலையின் போக்குவரத்து நெரிசல்..! அனைத்தும் போய்விட்டன.”
ஆனால் என்னை மிகவும் பாதித்தது, வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்புவதன் வேதனைதான். வெறுங்கையுடன் சொந்த ஊருக்கு திரும்புவது, அவமானம் என் வயிற்றில் ஒரு கனமான கல் போல அமர்ந்திருக்கிறது. என் தந்தை என்னிடம் தொலைபேசியில் பேசி ‘பார்த்துக்கலாம்’ என்று நேர்மறையாக கூறினார். “வா மகனே, இது உன் வீடு வீடு , உன் கிராமம் என்று ஆறுதலாக சொன்னார். ஆனால் அவர் எனக்கு ஆறுதல் கூறினாலும், அவரது குரலில் இருந்த துக்கத்தையும் ஏமாற்றத்தையும் என்னால் கேட்க முடிந்தது’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்தப் பதிவு வைரலானதில் இருந்து, அந்த நபர் எந்த புதிய தகவல்களையும் பகிரவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது: அவரது வேதனையான கதை பலருடன் இணைந்தது.
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை உலகிலே என்று பலர் அந்த இளைஞருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.