விஜய்க்கு துணை முதல்வர்.. திருமாவுக்கு கேபினட் அமைச்சர்.. துரைவைகோவுக்கு இணை அமைச்சர்.. அமித்ஷா போடும் தூண்டில்.. சிக்குமா மீன்கள்?

  தி.மு.க.வுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைத்தே தீர வேண்டும், தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பியே தீர வேண்டும், அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார் என்று அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அவர்…

vijay thiruma

 

தி.மு.க.வுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைத்தே தீர வேண்டும், தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பியே தீர வேண்டும், அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார் என்று அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சில பெரிய தூண்டில்களை வீசியுள்ளதாகவும், அதில் மீன்கள் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா, அடுத்த கட்டமாக இந்த கூட்டணியில் இணையும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 எம்.பி.க்கள் உள்ள நிலையில், திருமாவளவனுக்கு மத்திய கேபினட் அமைச்சர் பதவி கொடுக்க தயார் என்று அமித்ஷா தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், மதிமுக தங்கள் கூட்டணியில் இணைந்தால், துரை வைகோவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி தரப்படலாம் என்றும் வதந்திகள் கூறப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர், விஜய் துணை முதலமைச்சர் என்றும் பேசப்பட்டு வருவதோடு, பா.ஜ.க.வில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு என்றும் அவர் கூறி வருவதாக தெரிகிறது. மேலும், தே.மு.தி.க. உள்பட சில கட்சிகளை இணைத்தால், அந்த கட்சிகளுக்கும் சில பதவிகள் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், தி.மு.க. கூட்டணியை உடைத்து, அதில் உள்ள கட்சிகளை அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இணைத்து ஒரு பெரிய மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருப்பதாகவும், அதில் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த தகவல்கள் எல்லாம் வெறும் வதந்தியே என்றும், தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் பிரியாது என்றும், அந்த கூட்டணியிலேயே இருந்து அதிக தொகுதிகளை வாங்கி சாதிக்குமே தவிர, மாற்று கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் செல்ல வாய்ப்பு இல்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் இது போன்ற பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கும் என்பதும், ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே நம்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.