சண்டியர் டைட்டிலை மாற்ற சொன்ன ஜெயலலிதா.. விருமாண்டி படத்தில் அவரையே மறைமுகமாக கலாய்த்த கமல்..

Published:

தமிழ் சினிமாவில் ஒருவர் நினைத்தது போல டைட்டில் வைத்து நினைத்த நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து திரைப்படங்களை எடுக்க வேண்டும் என விரும்பும் போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு தான். நிறைய திரைப்படங்களில் ஒரு ஹீரோவை ஒப்பந்தம் செய்து சூட்டிங் ஆரம்பித்த பின்னர் சில காரணங்களால் பாதியில் நின்று போன சம்பவங்கள் என நிறைய நிகழ்ந்ததுண்டு.

அதே போல ஒரு கட்டத்திற்கு பின்னர் ஹீரோக்கள் மாற்றப்பட்டு படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மாற்றப்பட்டு படத்தின் டைட்டில் வரை மாற்றப்பட்டு கூட நிறைய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் மிக குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படம் தான் கமல்ஹாசன் இயக்கி நடித்து இந்த காலத்திலும் சினிமா பிரியர்கள் கொண்டாடி வரும் விருமாண்டி திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் அபிராமி, நெப்போலியன், பசுபதி, ரோகிணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இருந்த திரைக்கதை அம்சம் இந்திய சினிமாவிற்கே புதுமையாக இருந்ததுடன் படத்தின் ரிலீசிற்கு பின்னர் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றிருந்தது.

ஆனால் இந்த படத்தின் டைட்டிலுக்கு பின்னால் மிகப்பெரிய பரபரப்பான சம்பவங்களும் நிறைய அடங்கி உள்ளது. முதலில் இந்த படத்திற்கு சண்டியர் என டைட்டில் வைத்து படத்தை கமல்ஹாசன் தொடங்கி இருந்தார். ஆனால் பின்னர் தான் அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பெயர் என்றும் கூறி இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டுமென தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா இருக்க இந்த டைட்டில் பிரச்சனை வரும் என தெரிந்து அதை மாற்ற சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் பின்னர் தான் சண்டியர் என்ற டைட்டில் மாற்றி விருமாண்டி என்றும் பெயர் சூட்டி படத்தை ரிலீஸ் செய்திருந்தார் கமல்ஹாசன்.

அப்படி இருக்கையில் இந்த படத்தில் வரும் வசனம் ஒன்று மறைமுகமாக படத்தின் டைட்டில் மாற்ற சொன்ன ஜெயலலிதா அம்மாவை பற்றி வரும். விருமாண்டி படத்தில் ஒரு காட்சியில் டிம்போவுக்கு முன்னால் நின்றபடி கமல்ஹாசன் சென்று கொண்டிருப்பார். அப்போது அவருக்கு பின்னால் காரில் வரும் நடிகர் பாலா சிங் கமலை பார்த்து ‘சண்டியரே சண்டியரே’ என அழைத்துக் கொண்டு வர, “எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் காதுல விழலயா’ என விரக்தியில் கேட்பார்.

இதற்கு பதில் சொல்லும் கமல்ஹாசன், “அம்மா ஆசையா வெச்ச பேரு விருமாண்டி இருக்கையில நீ வேற ஏதோ கூப்பிட்டா பாக்க சொல்றியா” என ஜெயலலிதா அம்மாவை மறைமுகமாக குறிப்பிடுவது போல வசனம் வரும். இதன் பின்னர், “நீ என்ன பேர் சொன்னாலும் ஊர் உனக்கு வெச்ச பேரு சண்டியர் தானே” என பாலா சிங் கூறுவார்.

கமல் போல ஒரு கலைஞன் டைட்டில் மாற்ற செய்த பிரச்சனையையே லாவகமாக கதைக்கு நடுவே பயன்படுத்திய விஷயம், தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

மேலும் உங்களுக்காக...