பா.ஜ.க.வின் ’B’ டீம் தான் விஜய்,” “தி.மு.க.வின் ’B’ டீம் தான் விஜய்,” “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு விஜய் சென்றுவிடுவார்” என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் தி.மு.க.வின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி கொண்டிருந்தனர். இந்த அனைத்து வதந்திகளுக்கும் இன்றைய தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில் விஜய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை, தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை, கொள்கை எதிரியான பா.ஜ.க.வுடனும் கூட்டணி இல்லை என்று அவர் உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லிவிட்டார். மேலும், பா.ஜ.க.வை “பிளவுவாத சக்தி” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொன்னதிலிருந்து, அவர் இன்னொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர போகிறார் என்பதை ஒருவர் கூட கவனிக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே, ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் சேர விஜய் விரும்பியபோது, “நீங்களே தனிக்கட்சி ஆரம்பியுங்கள்; உங்களுக்கு நான் ஆதரவு தருகிறேன்” என்று ராகுல் காந்தி சொன்னதாக அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த விஜயதாரணி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது அது உண்மை என்பது தெரிய வந்துள்ளது.
ராகுல் காந்தி கொடுத்த தைரியத்தில் தான் அவர் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறார் என்றும், அடுத்ததாக ராகுல் காந்தியின் சந்திப்புதான் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறி வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்திற்கு கிட்டத்தட்ட 20 முதல் 25 சதவீத வாக்குகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணியில் சேர்ந்தால், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு கூட்டணி தகுதியாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் விஜய் சேர்க்க மாட்டார் என்றும், ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடையும் வாய்ப்பிருப்பதால், வன்னியர்களின் வாக்குகள் பெரும்பாலும் விஜய்க்கு விழ வாய்ப்பு இருப்பதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்த்தால் அந்த வாக்குகள் தனக்கு கிடைக்காது என்ற கணக்கையும் விஜய் போடுகிறார் என்றும் கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்க்காவிட்டால் கூட, பட்டியல் இன மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் அவர் தமிழக வெற்றிக் கழகம் – காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணி போதும் என்றும், அதன் பிறகு சில சிறிய கட்சிகள் வந்தால் கூட அவர் சேர்க்க தயாராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், கூட்டணி குறித்த ஒரு தெளிவான முடிவை விஜய் அறிவித்த நிலையில் இனிமேல்தான் அரசியல் ஆட்டம் ஆரம்பமாகும் என்றும், தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்த பிறகு அவருடைய பலம் என்ன என்பது மற்ற கட்சிகளுக்கு தெரியும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.