பத்திரிகையாளர் மணி அளித்த ஒரு பேட்டியில் விஜய்க்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் போட்டி என்றால் ஸ்டாலின் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்றும், ஆனால், விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் போட்டி என்றால் விஜய்க்குத்தான் சாதகம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், இன்னும் முழுமையாக அரசியல் களத்தில் இறங்காமலேயே திமுக அவரை பார்த்து அஞ்சுவதாக மணி சுட்டிக்காட்டியுள்ளார். விஜய் தனது பயணங்களை தொடங்கினால் திமுக மேலும் அதிர்ச்சி அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், முதலில் டெல்டா பகுதியிலும், அதன்பிறகு மேற்குப் பகுதியிலும், பின்னர் தென் மாவட்டங்களிலும், இறுதியாக சென்னையிலும் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் மணி அறிவித்துள்ளார்.
விஜய் களத்திற்கு வரும்போது அவர் என்ன பேசுகிறார், எந்தப் பிரச்சனைகளை முன்வைக்கிறார், அதற்கு திமுகவின் எதிர்வினைகள் என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் மணி தெரிவித்துள்ளார்.
விஜய் மட்டும் களத்தில் இறங்கினால், அது திமுகவுக்கு எரிச்சலையும், கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் அதை அவர்கள் வெளியே காண்பித்து கொள்ள மாட்டார்கள். விஜய் கோவையில் சாலை பயணம் நடத்திய அடுத்த நாளே, திமுகவும் ஒரு சாலை பயணத்தை நடத்தியது. விஜய் வேங்கைவயல் செல்லப் போகிறார் என்றவுடன், நிலுவையில் உள்ள வழக்கை அவசர அவசரமாக முடித்தது.
“திமுக இந்த விஷயத்தில் விஜய்யை மிகவும் கவனமாக அணுகுகிறது. விஜய் திமுகவுக்கு பெரும் ‘ஓட்டுச் சர்வநாசமாக’ இருக்கலாம் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று மணி அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய்யை பொறுத்தவரை, தற்போது நேரடியாக உதயநிதி ஸ்டாலினுக்குத்தான் போட்டியாக கருதப்படுகிறார். “திமுகவுக்கு ஏன் இவ்வளவு பயம் வருகிறது என்பதற்கு காரணம், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி திமுக பொறுப்பை ஏற்கும் பட்சத்தில், அவரால் விஜய்யை எதிர்கொள்ள முடியாது என்றுதான் பயப்படுகிறது,” என்று மணி கூறியுள்ளார்.
மேலும், “விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் போட்டி என்றால் ஸ்டாலின் எளிதாக வென்றுவிடுவார். ஆனால், விஜய்க்கும் உதயநிதிக்கும் போட்டி என்றால் விஜய்க்குத்தான் அட்வான்டேஜ் அதிகம். அது திமுகவுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் விஜய் விஷயத்தில் திமுக கவனமாக இருக்கிறது,” என்று மணி அடித்துச் சொல்கிறார்.
“விஜய் வெறும் ரோட் ஷோ மட்டும் நடத்தினால் போதாது. அவர் மண்ணில் இறங்கி, மக்களுடன் மக்களாக சென்று பேச வேண்டும். இதுவரை விஜய் பெரிய அளவில் எதையும் செய்யவில்லை. ஆனாலும், திமுக அவரை பார்த்து பயப்படுகிறது. விஜய் களத்தில் இறங்கி, ரோட் ஷோ, நடைபயணம், பாதயாத்திரை என மக்களுடன் மக்களாக பழகிவிட்டால், திமுக என்ன கதியாகும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை,” என்று பத்திரிகையாளர் மணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.