“அரசியலுக்கு வருவது உறுதி; அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி; மக்களுக்கு சேவை செய்வது உறுதி” என்று வாக்குறுதி அளித்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து பின்வாங்கினார். அதேபோல, நடிகர் விஜய்யும் தற்போது குழப்பத்தில் இருப்பதாகவும், அவரும் அரசியலில் இருந்து பின்வாங்க வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தி.மு.க.தான் தனது முதல் எதிரி” என்று கூறிவரும் விஜய், கூட்டணியுடன் நிற்பாரா அல்லது தனித்து நிற்பாரா என்ற குழப்பத்தில் இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அவரை விரும்பி அழைப்பதாகவும், ஆனால் முடிவெடுக்க முடியாமல் விஜய் குழப்பத்தில் இருப்பதாகவும் ரவீந்திரன் துரைசாமி ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
ரஜினி போல் கடைசி நேரத்தில் விஜய் பின்வாங்கி விடுவாரா என்ற கேள்விக்கு நழுவலாக பதிலளித்த ரவீந்திரன் துரைசாமி, “விஜய் குழப்பத்தில் இருக்கிறார் என்பது மட்டும் உறுதி. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறினார். சீமான் மாதிரி தனித்து போட்டி என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டை விஜய்யால் எடுக்க முடியவில்லை என்றும், இரண்டு திராவிட கூட்டணிகளில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய அவருக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், தனித்து ஒரு கூட்டணி அமைக்கலாமா அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாமா என்ற குழப்பத்திலேயே விஜய் இப்போதும் இருப்பதாகவும் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார்.
ஆனால், விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த கருத்தை மறுத்துள்ளனர். “விஜய் மத்தியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அவர் இருக்கிறார் என்றும், சரியான நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை எடுப்பார்” என்றும் கூறி வருகின்றனர்.