ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதமானதன் காரணமாக பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது, சில பயணிகள் உணவின் தரம் சரியில்லை என்று கூறி, ஸ்பைஸ்ஜெட் ஊழியரை மரியாதை குறைவாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோக்களின்படி, “ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுக்கு அளித்த உணவு தரமாக இல்லை” என்று ஒரு ஊழியரை சூழ்ந்துகொண்ட பயணிகள், “தங்களுக்கு வழங்கப்பட்ட அந்த உணவை நீங்கள் சாப்பிடுவீர்களா? என கேட்டு, அவரை அந்த உணவைச் சாப்பிட வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“உணவின் தரம் சரியில்லை; உணவு கெட்டுப் போய்விட்டது” என்று பயணிகள் குற்றம் சாட்டினர். அதற்கு, ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மிகவும் பொறுமையாக, “நாங்கள் எங்கள் உணவு ஒப்பந்ததாரரிடம் இருந்துதான் உணவை வாங்கித் தருகிறோம். தரமான உணவுதான்; கண்டிப்பாக கெட்டுப்போக வாய்ப்பில்லை” என்று அமைதியாக கூறினார்.
ஆனால், அந்தக் கும்பல், “இந்த உணவு கெட்டுப் போய்விட்டது, இந்த உணவை நீங்கள் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டதும், அந்த ஊழியர் மிகவும் பொறுமையாக அந்த உணவை சாப்பிட்டுக் காண்பித்தார். “உணவு நன்றாகத்தான் இருந்தது” என்று அவர் கூறிய பிறகும், அந்த பயணிகள் கும்பல் விடாமல், அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியது. மேலும், தகாத வார்த்தைகளையும் பேசியது.
இந்த வீடியோ குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பயணிகளின் குற்றச்சாட்டை மறுத்ததோடு, பரிமாறப்பட்ட உணவு தரமானதாக இருந்தது என்றும், இந்த உணவு ஸ்பைஸ்ஜெட்டுக்கு மட்டுமில்லாமல், மற்ற விமான நிறுவனங்களுக்கும், விமான நிலையத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்துதான் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் இருந்து பெறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், “தங்கள் நிறுவன ஊழியர்களிடம் பயணிகள் நடந்துகொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், அப்படி இருந்தும் எங்கள் ஊழியர்கள் கடமையை மிகுந்த சிரமத்துடன் சிறப்பாக செய்தார்கள் என்றும், மிகவும் பொறுமையாக இந்த விஷயத்தை கையாண்டார்கள் என்றும், பயணிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் அதே நேரத்தில் எங்கள் ஊழியருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் பதிவாகி வருகின்றன. “இவர்கள் எல்லாம் விமானப் பயணிகளா அல்லது ரவுடிகளா? முன்ன பின்ன விமானத்தை இவர்கள் பார்த்ததுண்டா? விமான நிலைய ஊழியர்களை ஏன் இப்படி துன்புறுத்த வேண்டும்? இதே அம்பானி அல்லது அதானி விமான நிறுவனமாக இருந்திருந்தால் இப்படி அவர்களால் பேசியிருக்க முடியுமா? பயணிகளின் மோசமான நடத்தை வெட்கக்கேடானது” என்று பலர் பதிவு செய்து வருகின்றனர்.