எங்கே அடிச்சா எங்க வலிக்கும்ன்னு மோடிக்கு தெரியும்.. சைப்ரஸ் பயணத்தால் ஆடிப்போன துருக்கி..!

  பிரதமர் நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, சைப்ரஸின் சுதந்திரம், இறையாண்மை, மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இந்தியா உறுதியான ஆதரவை தெரிவிக்கும் என்று கூறினார். இது, சைப்ரஸின் ஒரு பகுதியை…

cyprus1

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, சைப்ரஸின் சுதந்திரம், இறையாண்மை, மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இந்தியா உறுதியான ஆதரவை தெரிவிக்கும் என்று கூறினார். இது, சைப்ரஸின் ஒரு பகுதியை தங்களுக்கு சொந்தம் என்று கூறிவரும் துருக்கிக்கு கொடுக்கப்பட்ட மறைமுகமான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

சைப்ரஸின் தலைநகர் நிகோசியாவில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸ் கொடியின் பின்னணியில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது, மறைமுகமாக ஆனால் உறுதியாக துருக்கிக்கு இந்தியா கொடுத்த திர்ப்பு சிக்னலாக கருதப்படுகிறது.

‘ஆபரேஷன் சிந்துார்’ சமயத்தில் பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவளித்ததும், காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த செயல் சரியான அதே நேரத்தில் ஒரு மெளனமான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில், நிகோசியாவின் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளை காண்பித்த சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடஸுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

கிழக்கு மத்தியதரை கடலில் துருக்கியின் அண்டை நாடான சைப்ரஸ், 1974 இல் துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பால் பிளவுபட்டது. சைப்ரஸின் வடக்கு பகுதி துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை துருக்கி மட்டுமே ‘வடக்கு சைப்ரஸ் துருக்கிய குடியரசு’ என்று அங்கீகரிக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ‘சைப்ரஸ் குடியரசை’ முழுத்தீவின் சட்டபூர்வமான அரசாங்கமாகவே கருதுகின்றன.

பிரதமர் மோடி, சைப்ரஸின் இரு பகுதிகளையும் பிரிக்கும் ஐ.நா. கட்டுப்பாட்டில் உள்ள ‘பசுமை கோடு’ என்ற பகுதியையும் பார்வையிட்டார். இது ஐ.நா. அமைதி காக்கும் படையால் கண்காணிக்கப்படுகிறது.

காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு, ‘ஆபரேஷன் சிந்துார்’ சமயத்தில் பாகிஸ்தானுடன் துருக்கி தனது ராணுவ உறவுகளை வலுப்படுத்தியதோடு, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் எழுப்பவும் முயன்றது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் உறுப்பினரான சைப்ரஸுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம், துருக்கிக்கு எதிராக இந்தியாவில் அதிகரித்து வரும் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.

இந்திரா காந்தி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோருக்கு பிறகு, இந்திய பிரதமர் ஒருவர் சைப்ரஸுக்கு செல்வது இது மூன்றாவது முறை. துருக்கியின் பாரம்பரிய போட்டியாளர்களான கிரீஸ், ஆர்மீனியா, எகிப்து, மற்றும் தற்போது சைப்ரஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், துருக்கியின் பிராந்திய ஆதிக்கத்திற்கு பதிலடி கொடுக்க முயல்கிறது. இந்த இராஜதந்திர நடவடிக்கைகள், துருக்கியை தனிமைப்படுத்தவும், தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் அதன் செல்வாக்கை குறைக்கவும் இந்தியாவின் வியூகத்தை காட்டுகிறது.

“எரிவாயு வளம் நிறைந்த சைப்ரஸுக்கு மோடியின் பயணம், கிரீஸ், ஆர்மீனியா மற்றும் எகிப்து உள்ளிட்ட துருக்கியின் போட்டியாளர்களுடன் இந்தியா உறவுகளை ஆழப்படுத்துவதற்கான சமிக்ஞையாக துருக்கி பார்க்கும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் முயற்சிக்கு சைப்ரஸ் நீண்ட காலமாக ஆதரவளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் எதிரியை நேரடியாக தாக்குவதற்கு பதிலாக எதிரியின் எதிரிகளோடு கைகோர்த்தால் எதிரி ஆட்டம் காணுவார் என்பதற்கேற்ப பிரதமர் மோடியின் ராஜதந்திரம் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர். எங்கே அடிச்சா துருக்கிக்கு வலிக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி, துருக்கி இனி இந்தியாவிடம் வாலாட்டினால் அதன் எதிர்வினைகளை கடுமையாக சந்திக்க வேண்டிய நிலை வரும் என்ற எச்சரிக்கையும் இந்த பயணத்தின் மூலம் கூறப்பட்டுள்ளது.