2026 ஆம் தேர்தல் என்பது கடந்த 50 ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வந்த திராவிட கட்சிகளின் முடிவாக இருக்கலாம் அல்லது அழிவின் ஆரம்பமாக இருக்கலாம் என பத்திரிகையாளர் பெலிக்ஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக, திமுக என இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த இரு கட்சிகளின் மீதும் பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. குறிப்பாக, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமை உள்ள தலைவர்கள் காலமான பிறகு, இரு கட்சிகளுக்கும் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
தற்போது, முக ஸ்டாலின் மீது மக்கள் மத்தியில் பெரிதாக வெறுப்பு இல்லையெனினும், அவருக்கு 72 வயதாகிவிட்டதால் அவரை மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வராகவோ அல்லது நிழல் முதல்வராகவோ இருப்பார் என்ற கூற்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்தான், மக்கள் ஒரு இளைய தலைமையை தேடி வரும் சூழ்நிலையில் சரியான நேரத்தில் விஜய் அரசியலுக்கு வருகை தந்துள்ளார். அவரது அரசியல் வருகை, பொதுமக்கள் மட்டுமின்றி, அதிமுக மற்றும் திமுகவின் சில ஆதரவாளர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் பெண்கள் தான் அதிக வாக்குகளை செலுத்தும் மக்களாக இருப்பதால், அவர்களின் ஆதரவும் விஜய்க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
கல்லூரி மாணவர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைய தலைமுறை வாக்காளர்கள் என 18 முதல் 40 வயதுக்குள் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் விஜய்க்கே அதிக அளவில் வாக்களிப்பார்கள் என கணிக்கப்படுகிறது. எனவே, அவருக்கு 20 முதல் 30 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒரு வரலாற்று தவறை செய்துவிட்டதாக விமர்சனம் வருகிறது. தற்போது, அதிமுக கட்சியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் விலகி உள்ள நிலையில், அந்த கட்சி மீண்டும் வளர்வது மிகவும் சிரமமானதாக இருக்கலாம். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக எந்த தேர்தலிலும் வெற்றியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக பக்கம் பார்த்தால், மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சிகள், திமுக செய்கின்ற தவறுகளை வெளியில் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதால், கூட்டணி கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, நடுநிலை வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருக்கக்கூடும்.
இந்த வாக்குகள் அனைத்தும் தமிழக வெற்றி கழகத்திற்கே செல்லும் என்று பெலிக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மொத்தத்தில், விஜய்தான் 2026 தேர்தலில் “மேன் ஆஃப் தி மேட்ச்” ஆவார் என்றும், குறிப்பாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடைசி நான்கு மாதங்கள் போர் மாதிரி தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்றும் பத்திரிகையாளர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.