அதிமுக-பாஜக கூட்டணி தற்போது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் நிர்வாகிகள் அளவிலும், தொண்டர்கள் அளவிலும் இரு கட்சிகளும் ஒருங்கிணைக்கவில்லை என்றும், இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேல்மட்டத்தில் மட்டும் கூட்டணி வைத்துவிட்டால் போதாது; தொண்டர்கள் இணைந்து வேலை செய்தால் தான் அந்த கூட்டணி முழுமையாக வெற்றி பெறும் என்று கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கடைசி நேரத்தில் பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார் என்று கூறப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த விதமான நெருக்குதலும் வரக்கூடாது என்பதற்காகவே கூட்டணியை அவர் அமைத்துள்ளதாகவும், ஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவர் பாஜகவை விலக்கி விட்டுவிட்டு, விஜய்யை கூட்டணியில் சேர்த்துக் கொள்வார் என்றும், இதற்கான திரைமறைவு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அதிமுக-விஜய் கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக இணைவது உறுதி என்றும், இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேறு ஆப்ஷன் இல்லாததால் கண்டிப்பாக அதிமுக கூட்டணியில் தான் சேரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக 100 தொகுதிகளை தனக்கு வைத்துக்கொண்டு, மீதமுள்ள 134 தொகுதிகளை விஜய், பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்குப் கொடுத்து விடும் என்றும், அந்த வகையில் விஜய்க்கு 50 முதல் 60 தொகுதி வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்றும், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய பொறுப்புகளில் விஜய், ராமதாஸ் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இப்படி ஒரு தகவல் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இருந்து வந்துக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 10 மாதம் இருப்பதால், அதற்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும், என்னென்ன திடீர் திருப்பங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.