தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில், அந்த கட்சி 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதுவரை நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் போல் இல்லாமல், விஜய்யின் கட்சி மக்களின் நன்மதிப்பை அதிகமாக பெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில் விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் செய்த தவறுகளை விஜய் செய்யமாட்டார் என்றும், குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில், தற்போது அதிமுக கூட்டணியில் விஜய் இணைவார் என்றும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி மற்றும் 117 தொகுதிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்ட நிலையில், அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி இடம், விஜய்க்கு நெருக்கமானவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன்படி அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்ற சின்னச் சின்ன கட்சிகள் கூட்டணிக்கு தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய கட்சிகள், தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளை கேட்டு வாங்கி விடுவார்கள் என்றும், அவர்களால் மற்ற தொகுதிகளில் எந்தவிதமான லாபமும் இல்லை என்பதால், இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டதாகவும், இதற்கு கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
முதல் இரண்டரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், விஜய் துணை முதல்வராகவும் இருப்பார். அதற்குப் பிறகு, அடுத்த இரண்டரை வருடங்கள் விஜய் முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமி துணை முதல்வராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.