கூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்

Published:

சென்னை: ‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் எப்படி பெறலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதவிரதமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் ஆப் மூலம் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கும் கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க உத்தரவிட்டார். இதன்படியே கூட்டுறவுத்துறை வழங்கும் அனைத்து சேவைகளையும் மக்கள் எளிதாக பெற ஏதுவாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.தமிழக கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய ‘கூட்டுறவு’ என்ற செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

இந்த ‘கூட்டுறவு’ செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பிக்க முடியும். மேலும் இந்த செயலியில் பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், கடன் விண்ணப்பம், இ-வாடகை, வங்கி சேவை, உங்கள் சங்கம், இ-சேவை, மருந்தகம், கிடங்கு, நியாயவிலைக் கடை, தொடர்புக்கு, அலுவலகம் என்ற தலைப்புகளில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் ‘கூட்டுறவு’ செயலி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியில் சென்றடையும். இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வார்கள்.

அந்த வகையில், இந்த ‘கூட்டுறவு’ செயலி மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற முடியும் இதற்கான வட்டி வீதம் 8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். இந்த கடன்கள் பொதுவாக சிபில் ஸ்கோர் நன்றாக இருப்பவர்களுக்கே கிடைக்கும். சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் எந்த வங்கியும் கடன் தராது. எனவே சிபில் ஸ்கோரை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. சிபில் ஸ்கோரை சரியாக வைத்துக்கொள்ள ஏற்கனவே வாங்கிய கடனை சரியாக செலுத்திவிட வேண்டும். கடனை செலுத்தாமல் ஏமாற்றியவர்கள் கடன் வாங்க இயலாது.

மேலும் உங்களுக்காக...