1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முதலில் ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய காரணம் மாணவர்கள் என்றும், தற்போது அதே மாணவர்கள் விஜயின் பக்கம் சாய்ந்து உள்ளதால், திமுக பாணியில் விஜய் கட்சி ஆட்சியைப் பிடித்து விடுமோ என்ற அச்சம் திமுகவுக்கு இருப்பதாகவும், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
1967 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக மாபெரும் வெற்றி பெற்றதற்குக் காரணமே மாணவர்களின் எழுச்சி தான். மாணவர்கள் அப்போது திமுகவுக்காக, குறிப்பாக அறிஞர் அண்ணாவுக்காக பிரச்சாரம் செய்தார்கள் என்பதும், மாணவர்களின் ஒட்டுமொத்த ஓட்டுகள் திமுகவுக்கு விழுந்ததால் காமராஜர் கூட வெற்றி பெற முடியாமல் போனது என்பது கடந்த கால வரலாறு.
அந்த வகையில், தற்போது அதே மாணவர்களைத்தான் விஜய் குறி வைத்துள்ளார் என்றும், “மாணவர்கள் தான் ஒரு நாட்டின் திருப்புமுனையை ஏற்படுத்தும் சக்தி” என்பதைப் புரிந்து கொண்டு, அவர் மாணவர்களிடமிருந்து தனது அரசியலை ஆரம்பிக்கிறார். இதை அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழா நடத்துவது போல் அரசியலில் நுழைந்துவிட்டார் என்றும், அது தற்போது அவருக்கு கை கொடுத்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மாணவர்கள் மிகுந்த எழுச்சி பெற்று இருக்கிறார்கள் என்றும், விஜய்யை ஆட்சி கட்டிலில் உட்கார வைக்க வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மாணவர்கள் மட்டுமன்றி, தங்களுடைய பெற்றோரின் மனதையும் மாற்றக்கூடியவர்களாக இருப்பதால், ஒட்டுமொத்தமாக விஜய்க்கு அதிக சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், அவர் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது.
“மாணவர்களை வைத்துதான் ஆட்சிக்கு வந்தோம்” என்பது திமுகவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால், தற்போது அதே மாணவர்களை வைத்து விஜய் ஆட்சிக்கு வந்து விடுவாரோ என்ற அச்சம் திமுகவுக்கு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி, விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவரது முகத்தை காண்பித்தாலே அது ஓட்டாக மாறும். அப்படித்தான் உதயநிதியை ஒரு நடிகர் என்ற அளவில் பிரபலப்படுத்த திமுக முயன்றது. ஆனால் அது எடுபடவில்லை. ஆனால் அதே நேரத்தில், விஜய் விஷயத்தில் மிகப்பெரிய அளவில் ஓட்டாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.