தங்களுடைய அணுகுண்டு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஈரான் ஏற்றுக்கொண்டால் அந்த நாட்டுக்கு நல்லது; இல்லையெனில் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என அமெரிக்கா மிரட்டிய நிலையில், “எங்களை மிரட்டும் அளவுக்கு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்று ஈரான் அதிரடியாக பதில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, ஒரு புதிய அணு ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவை ஈரானுடன் பகிர்ந்து, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதை ஏற்க வேண்டியது ஈரான் நாட்டின் நலனுக்கு உகந்தது என்றும், ஏற்கவில்லை என்றால் அதற்கான கடுமையான விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்றும் அமெரிக்கா எச்சரித்தது.
“ஈரான் ஒருபோதும் அணுகுண்டு தயாரிக்கக் கூடாது,” என்றும் டிரம்ப் தெளிவாக கூறினார்.
ஆனால், டிரம்புக்கு ஈரானின் மத தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி பதிலடி கொடுத்துள்ளார். “எங்களை மிரட்டுவதற்கு அமெரிக்காவுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “அமெரிக்காவின் முன்மொழிவுக்கு நாங்கள் உரிய பதில் அளிப்போம். தேசிய நலன்கள் மற்றும் மக்கள் உரிமைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் பதில் அளிக்க முடியும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான், அணுகுண்டு தயாரிப்பதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஈரான் முற்றிலும் நிராகரிக்கிறது என்றும், மூன்று இடங்களில் ரகசியமாக அணு ஆயுத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“யுரேனியம் செறிவூட்டல் என்பது எங்களது அணுத் திட்டத்தின் பிரதான தளம். அதில் ஏன் அமெரிக்கா தலையிட வேண்டும்?” என்றும் ஈரானின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவிடம் நாங்கள் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்காவின் அடக்குமுறை எங்களிடம் எடுபடாது. எங்களிடம் அணு திட்டம் இருக்கக்கூடாது என்று வலியுறுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்றும் ஈரான் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.