சீமானின் பேச்சு, விஜயின் வீச்சு ஆகிய இரண்டும் சேர்ந்து, தமிழகத்தில் இதுவரை காணாத ஒரு மூன்றாவது அணியை மக்கள் பார்ப்பார்கள் என்றும், இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியும் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, அதிமுக மற்றும் திமுக கூட்டணி இப்போதே தயாராக உள்ளது. ஏற்கனவே வலிமையாக உள்ள திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியே போகாது என்றும், வேறு புதிய கட்சிகள் வரவும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.
அதேபோல், அதிமுக–பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் விஜய்யின் நிலைப்பாடு, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் அவர் இணைந்தால், அவருக்கான எதிர்பார்ப்பு தவிடுபொடி ஆகிவிடும்என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
இதற்கு முன் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்கள், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்டோர், தனித்தன்மையுடன் கட்சியை தொடங்கியபோதும், அதன்பின் திராவிடக் கட்சிகளுடன் இணைந்து விட்டார்கள். அதனால்தான் அவர்களுடைய கட்சிகள் காணாமல் போனது. அந்த ஒரு தவறை செய்யக்கூடாது என விஜய் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
அதேபோல், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் சீமானும் உறுதியாக இருக்கிறார். எனவே, விஜய் மற்றும் சீமான் இணைந்து ஒரு மூன்றாவது அணியை உருவாக்குவது என்பது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் வந்தால், கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
“நாங்கள் எடுத்த கருத்து கணிப்புகளில், விஜய்க்கு 22% வாக்குகள் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம். ஏற்கனவே சீமானிடம் 8% வாக்குகள் இருக்கிறது. இரண்டும் சேர்ந்தால், 30 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைத்தால், கண்டிப்பாக இரண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும். குறைந்தபட்சம் தொங்கு சட்டசபையை ஏற்படுத்த மூன்றாவது அணியால் முடியும்,” என்று அவர் கூறினார்.
அவர் கூறியது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.