வாஷிங்டன் போஸ்ட்டில் பத்திரிகையாளராக பணிபுரியும் சசிதரூர் மகன்.. அப்பாவிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி..!

  பகல்ஹாம் தாக்குதலுக்குப் பிறகு, சசிதரூர் தலைமையிலான எம்.பி.க்கள் குழு உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல் குறித்து விளக்கம் அளித்து வருகிறது என்பதை நாம் பார்த்துவருகிறோம். தற்போது இந்தக் குழு…

sashi tharoor son

 

பகல்ஹாம் தாக்குதலுக்குப் பிறகு, சசிதரூர் தலைமையிலான எம்.பி.க்கள் குழு உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல் குறித்து விளக்கம் அளித்து வருகிறது என்பதை நாம் பார்த்துவருகிறோம். தற்போது இந்தக் குழு அமெரிக்காவில் இருக்கும் நிலையில், சசிதரூர் அமெரிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது சசிதரூரின் மகன் “வாஷிங்டன் போஸ்ட்” என்ற பத்திரிகையில் பத்திரிகையாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில், அப்பாவிடம் அவர் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு சசிதரூர் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்த சசிதரூர், தன்னுடைய மகனே கேள்வி கேட்க வருகிறார் என்பதை நினைத்தவுடன், பெருமையாக, “இவர் தான் என்னுடைய மகன். இவருடைய கேள்விக்கு பதிலளிக்கத்தான் இங்கு வந்தேன்,” என்று நகைச்சுவையாக கூறினார்.

அதன் பிறகு, அவரது மகன் ஈஷான் தரூர் கேட்ட கேள்வி: “பகல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பு இருக்கிறது என்று இந்தியா கூறியதற்கான ஆதாரத்தை எந்த ஒரு வெளிநாட்டு அரசு கேட்டதா?” என்று இருந்தது.

அதற்கு பதிலளித்த சசிதரூர், “நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு மகன் தன்னுடைய அப்பாவிடம் இப்படித்தான் கேள்வி கேட்பான்,” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்: “எந்த வெளிநாட்டு அரசும் ஆதாரம் கேட்கவில்லை. ஆனாலும், வெளிநாடுகளிடம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கிறது. கடந்த 35 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாத தாக்குதல்களில் ஒவ்வொன்றுக்கும் பின்னால் பாகிஸ்தான் இருப்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துக்கொண்டே தான் வருகிறது.

ஒசாமா பின் லாடனின் விஷயத்திலும், அவர் எங்கே இருக்கிறார் என்பதையெல்லாம் தெரியாது என்றே பாகிஸ்தான் கூறியது. ஆனால், அவர் பாகிஸ்தான் ராணுவ முகாமுக்கு பக்கத்தில் தான் தங்கி இருந்தார் என்பதும், அமெரிக்கா அவரை அங்குதான் பிடித்ததும் நமக்கு நினைவிருக்க வேண்டும்.”

“பாகிஸ்தான் எப்போது மறுப்பு தெரிவிக்கும் என்று நாங்கள் அறிவோம். பயங்கரவாதிகளை அனுப்பிவிட்டு, அவர்கள் பிடிக்கப்படும் வரை பாகிஸ்தான் மறுத்துக்கொண்டே இருக்கும். பிடிக்கப்பட்டவுடன், அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறும். இது கடந்த பல ஆண்டுகளாக நடந்து கொண்டே இருக்கிறது,” என்றார்.

மேலும், “இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையில் வேறொரு நாடு தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. அது சமமற்ற நிலையை உருவாக்கும். பயங்கரவாதிகளும் பாதிக்கப்பட்டவர்களும் ஒரே நிலை என்றால் அது சரியானதல்ல,” என்றும் தெரிவித்தார்.

“அமெரிக்கா, மோடி தலைமையிலான அரசிடம் சில கோரிக்கைகளை வைத்திருக்கலாம். அதே நேரத்தில், போரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கருத்துக்களை தெரிவித்திருக்கலாம். ஆனால் இந்தியா எடுத்த முடிவுக்கும், அமெரிக்காவின் அழைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.