ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட் அணிந்த பெண்களின் புகைப்படம் தந்தால் வெகுமதி: பத்திரிகையின் அதிர்ச்சி அறிவிப்பு..!

  பிரபல பத்திரிகை ஒன்று இளம் பெண்கள் பொது இடங்களில் ஷார்ட்ஸ் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்த புகைப்படங்களை எடுத்து அனுப்பினால் வெகுமதி தரப்படும் என்று அறிவித்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹங்கேரி…

magazine

 

பிரபல பத்திரிகை ஒன்று இளம் பெண்கள் பொது இடங்களில் ஷார்ட்ஸ் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்த புகைப்படங்களை எடுத்து அனுப்பினால் வெகுமதி தரப்படும் என்று அறிவித்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மெட்ரோபோல் என்ற நாளிதழ், பெண்கள் மினி ஸ்கர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்த நிலையில், அவர்கள் கால்களை புகைப்படமாக எடுத்து தருமாறு வாசகர்களை கேட்டுக்கொண்டது.

பிரசுரிக்கப்படும் புகைப்படங்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு, பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் தனி உரிமைகளை பாதிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருப்பதாக, பல பெண்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.

அது மட்டும் இன்றி, இந்த கோரிக்கையை அடுத்து வாசகர்கள் அனுப்பிய கிளாமரான புகைப்படங்களையும் அந்த பத்திரிகை வெளியிட்டதை அடுத்து, பத்திரிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆசிரியர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டம் நடைபெற்றது.

பொது இடங்களில், சாலைகளில், மெட்ரோ நிலையங்களில் ஷார்ட்ஸ் மற்றும் குட்டை பாவாடை அணிந்த பெண்களின் கால்களை புகைப்படம் எடுத்து வாசகர்கள் அனுப்புவதும், அதை ஒரு பத்திரிகை வெட்கமே இல்லாமல் வெளியிடுவதும், பெண்களை ஒரு போகப்பொருளாக பார்ப்பதற்கே சமம் எனக் கூறப்படுகிறது.

“பெண்கள் ஒன்றும் பொருட்கள் அல்ல. அவர்களுக்கும் மனது இருக்கிறது. ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்தை அனைவரும் பார்க்கும் வகையில் பத்திரிகையில் பிரசுரிப்பது சட்டப்படி தவறு,” என்றும் பல பெண்கள் அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

இது குறித்து, ஒரு கல்லூரி மாணவி கூறியதாவது: “நான் ஒரு பட்டமளிப்பு விழாவுக்குச் சென்று வந்தேன். வெளியே வந்தபோது, எனக்கே தெரியாமல் என்னுடைய புகைப்படம் அந்த பத்திரிகையில் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது,” எனத் தெரிவித்திருந்தார்.

பெண்கள் என்ன மாதிரியான உடை அணிய வேண்டும் என்பது அவர்களது விருப்பம். ஆனால், அதற்காக பெண்களின் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்து, அதை பத்திரிகைகளில் பிரசுரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, பெண்கள் அமைப்புகள் கூறுகின்றன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.