சென்னை புறநகர்ப் பகுதிகளில் புறம்போக்கில் குடியிருப்போருக்கு பட்டா.. உதயநிதி அறிவிப்பு

Published:

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள அரசின் புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். ஆனால்
சென்னையை பொறுத்தவரை நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், அந்த பகுதிகளில் வீட்டு மனை வாங்கியவர்கள் அங்கு பட்டா எந்த காலத்திலும் வாங்க முடியாது.

அதேநேரம் ஆட்சேபனையற்ற அரசின் புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு அரசு அவ்வப்போது பட்டா வழங்கி வருகிறது. அதுவும் அரசு பதிவேடுகளில் ‘நத்தம்’ என வகைப்படுத்தப்பட்ட ஆட்சேபனையற்ற நிலங்களில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. சிட்லபாக்கம் ஏரி, தாழம்பூர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அடையாறு ஆறு உள்ளிட்ட இடங்களில் நடந்த மிகப்பெரிய முறைகேடுகள் காரணமாக பட்டா வழங்கும் விவகாரத்தில் அரசு கடும் கறார் காட்டி வருகிறது.

இந்நிலையில் சென்னை அதன் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் வழங்கப்படும் என சட்டசபையில் சிறப்பு திட்டங்கள் செயலாக்க திட்டம் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு பட்டா பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டன. எனவே, பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை போக்கிட வேண்டும் என்ற முனைப்போடு திராவிட முன்னேற்ற கழக அரசு செயல்பட்டு வருகிறது

இதற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் நமது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பட்டா இல்லாத பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருக்கின்றோம்” என்றார்.

மேலும் உங்களுக்காக...