தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கி 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அமையப்போகின்றன. வழக்கமாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு துருவங்களுக்கு இடையே மட்டுமே சுழன்று கொண்டிருந்த அரசியல் களம், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய சக்தியின் வருகையால் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திராவிட கட்சிகளுக்கே முன்னிலை கொடுத்தாலும், தரைமட்டத்தில் நிலவும் சூழல் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் “ஆக்சிஸ் மை இந்தியா” நிறுவனம் மட்டுமே விஜய்யின் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பிரகடனம் செய்துள்ளது. அந்த நிறுவனம் விஜய் தலைமையிலான த.வெ.க 98 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுமார் 35 சதவீத வாக்கு வங்கியை விஜய் அறுவடை செய்வார் என்றும், இது ஆளும் தரப்பிற்கு இணையான ஒரு பலத்தைக் காட்டும் என்றும் அந்தக் கணிப்பு கூறுகிறது.
இருப்பினும், மற்ற முக்கிய கருத்துக்கணிப்பு நிறுவனங்களான “பீப்பிள்ஸ் பல்ஸ்” மற்றும் “பி-மார்க்” போன்றவை விஜய்க்கு 13 முதல் 26 தொகுதிகள் வரை மட்டுமே கிடைக்கும் என்று மிகக் குறைந்த எண்ணிக்கையையே கணித்துள்ளன. இத்தகைய முரண்பாடான கணிப்புகள் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், விஜய்யின் ஆதரவாளர்களோ இந்த கணிப்புகளை பொய்யாக்கி, 170 முதல் 190 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமருவார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
நிஜமான தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, அது இந்தியாவையே வியக்க வைக்கும் ஒரு வரலாற்று சாதனையாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, பாரம்பரியமாக ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் வாக்கு வங்கியை விஜய் சிதைத்து, இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக பெற்றுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த வேளையில், த.வெ.க-வின் எழுச்சி திராவிட கட்சிகளின் பலத்த கோட்டைகளைத் தகர்க்குமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.
இந்த தேர்தலின் முடிவுகள் வெளியான பிறகு, இனிவரும் காலங்களில் அரசியல் கருத்துக்கணிப்புகளை எடுக்கும் நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறையை முழுமையாக மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். மக்கள் மனநிலை என்பது சில ஆயிரம் பேரிடம் கேட்கப்படும் கேள்விகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை இந்த “சைலண்ட் புரட்சி” நிரூபிக்கும் என்று தெரிகிறது. ஒருவேளை விஜய் 120 தொகுதிகளுக்கும் மேலாக வென்று சாதனை படைத்தால், அது எதிர்காலத்தில் கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
