அரசின் இ-சேவை மையங்களில் அலைக்கழிக்கப்படும் மக்கள்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்

By Keerthana

Published:

கோவை: 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்களில் மக்கள் சர்வர் பிரச்சனை காரணமாக அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14-ந் தேதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஆதார் கார்டுகளை புதுப்பிக்க இசேவை மையங்களில் இரட்டிப்பு கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

ஏன் புதுப்பிப்பு: 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுப்பதற்காக வழங்கப்பட்ட ஆவணமும் தற்போது வைத்திருக்கக்கூடிய ஐடி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப் மற்றும் உருவத்தின் உண்மை தன்மையை அறிய அரசு விரும்புகிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் உடன் தற்போது எடுக்கப்படும் பயோமெட்ரிக்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் அரசு இந்த புதுப்பிப்பை விரும்புகிறது.

இதனால் தமிழகத்தில் பலரும் இ-சேவை மையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். ஆனால் ஆதார் புதுப்பிக்க, திருத்தம் செய்ய புதிய ஆன்லைன் வடிவம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், சர்வர் சரியாக இயங்காததாலும் இந்த பணிகள் சரியாக மேற்கொள்ள முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.

முன்பு ஒரு நாளைக்கு 50-க்கும் மேலான ஆதார் திருத்தங்களை செய்து கொடுத்த இ சேவை ஊழியர்கள், தற்போது ஒரு நாளைக்கு 20-க்கு மேல் செய்து கொடுக்க முடியவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். சில நேரம் திருத்தம் செய்யும்போது தள்ளுபடி என்று வருகிறதாம். அவ்வாறு வரும்போது தனியார் ஆதார் திருத்தம் செய்பவர்கள் ஒரு தள்ளுபடி விண்ணப்பத்துக்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படுமாம். ஒரு நாளைக்கு 4 தள்ளுபடி ஆனாலே ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டியது ஏற்படும் என்பதால் ஆதார் அப்டேட் பணியை செய்து கொடுக்க தனியார் இசேவை மையத்தினர் தயக்கம் காட்டி வருகிறார்களாம்..

இது ஒருபுறம் எனில், ஆதார் சர்வர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், முன்பு போல் வேகமாக ஆதார் கார்டு பணிகள் மேற்கொள்ள முடியதா நிலை இருக்கிறதாம்..

மேலும் உங்களுக்காக...