விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

By Keerthana

Published:

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

வரும் செப்டம்பர் 8ம் தேதி சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் திங்கள் அன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறார்கள்.விடுமுறை நாட்கள், விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த தினம் போன்ற காரணத்தால் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் கொங்கு பகுதி மக்களின் வசதிக்காகவும், விநாயக சதுர்த்தியின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கவும் கோவைக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,

ரயில் எண் 06151/06152 சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இதில் ரயில் எண் 06151 சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் இடையே செல்கிறது. இந்த ரயில் செப்டம்பர் 06 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.45 மணிக்கு கோவை சென்றடையும் என்று ரயில்வே அறிவத்துள்ளது.

மறுமார்க்கமாக ரயில் எண். 06152 கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல் இடையேயான சூப்பர்பாஸ்ட் விழாக்கால சிறப்பு ரயில், கோவையில் இருந்து செப்டம்பர் 08 அன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 07.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் ஒரு ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி டூ டயர் கோச், 2- ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள், 12- படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3- முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும். சென்னை கோவை இடையேயான இந்த ரயில், சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் போது, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுபுறம் கோவையில் இருந்து புறப்படும் போது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் (சென்னை) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

மேலும் உங்களுக்காக...