குருமூர்த்தி கால் வைத்த இடம் விளங்காது என்றும் பாமக இனி அவ்வளவுதான் என்றும் அந்த கட்சியால் இனி எழுந்திரிக்க முடியாது என்றும் பிரபல பத்திரிக்கையாளர் மணி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அன்புமணி மற்றும் ராம்தாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இன்று இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியே எதுவும் வரவில்லை.
ஆனால், அதே நேரத்தில் டாக்டர் ராமதாஸை, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைச்சாமி சந்தித்தனர் என்ற தகவல் தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பாமகவை பின்னால் இருந்து இயக்குவது பாஜக தான் என்று ஏற்கனவே வதந்திகள் கூறப்பட்ட நிலையில், தற்போது குருமூர்த்தி சந்திப்பு அதனை உறுதி செய்துள்ளது.
பாமகவின் கருத்து வேறுபாடு என்பது கொள்கை ரீதியானது கிடையாது என்றும், இது முழுக்க முழுக்க குடும்ப பிரச்சினை மற்றும் அதிகார பிரச்சனை என்றும் மணி தெரிவித்தார்.
“சிவசேனாவை உடைத்தது போல், முலாயம்சிங் யாதவ் கட்சியை உடைத்தது போல், ராம்ராஜ் பாஸ்வான் கட்சியை உடைத்தது போல், சரத் பவர் கட்சியை உடைத்தது போல் தற்போது பாமகவை பாஜக உடைக்க முடிவு செய்துள்ளது. இது பாமகவுக்கு பெரும் பின்னடைவு,” என்றும் அவர் தெரிவித்தார்.
“இப்படித்தான் குருமூர்த்தி ஆலோசனையை கேட்டு, முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எந்த ஒரு மாநிலத்திலும் முதலமைச்சர் நடுத்தெருவில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியதாக வரலாறு இல்லை. இன்று அவர் தன்னந்தனியாக அரசியல் அனாதையாகியுள்ளார் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் குருமூர்த்தி தான்,” என்றும் மணி தெரிவித்தார்.