எலான் மஸ்க் நிறுவனத்திற்கு அளித்து வரும் அமெரிக்கா அரசின் சலுகைகளை நிறுத்துவேன் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், “நான் இல்லாவிட்டால் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்திருப்பார். அவரது வெற்றிக்காக நான் 250 மில்லியன் டாலர் செலவு செய்தேன்,” என எலான் மஸ்க் பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப்க்கு மிகவும் நெருக்கமானவராக எலான் மஸ்க் இருந்தார் என்பதும், அமெரிக்க அரசின் முக்கியத்துறையில் அவர் சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், ட்ரம்ப் எடுத்த சில வரி மற்றும் செலவுத் திட்டங்களைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில அறிவிப்புகளை மஸ்க் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், “மஸ்க் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு வழங்கும் ஒப்பந்தங்களையும் சலுகைகளையும் நிறுத்துவேன். இதனால் நம்முடைய பட்ஜெட்டில் பில்லியன் கணக்கான டாலர்களை சேமிக்க முடியும். பைடன் அரசு இதை ஏன் செய்யவில்லை என்பது எனக்கு ஆச்சரியம்,” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே ட்ரம்ப் அரசை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, வரி மற்றும் செலவுத் திட்டங்களை விமர்சித்து, “இது அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு எதிரானது,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
“சில விஷயங்களை விட்டுக் கொடுக்க சொன்னேன். ஆனால் மஸ்க் கேட்கவில்லை. அதன் பிறகு அவர் பைத்தியம் ஆகிவிட்டார்,” என்றும் ட்ரம்ப், மஸ்க் குறித்து கூறினார்.
அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் மஸ்க் “நான் இல்லாமல் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவருக்காக நான் 250 மில்லியன் டாலரை தேர்தலின் போது செலவு செய்தேன். ஆனால் அவர் நன்றி இல்லாமல் இருக்கிறார்,” என்றும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றதும், அரசு துறை செயல்திறன் மேம்பாட்டு பிரிவு என்ற புதிய பிரிவை உருவாக்கி, அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். இது அரசின் வீண் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்த துறையில் எதுவும் உருப்படியாக செய்ய முடியவில்லை என்று மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் அமெரிக்க அரசின் ஒப்பந்தங்களில் செயல்பட்டு வந்த நிலையில், ட்ரம்ப் எடுத்த சில முடிவுகள் அந்த நிறுவனங்களுக்கு பாதகமாக அமைந்ததாக கூறப்பட்டது.
அதுமட்டுமன்றி, எலக்ட்ரிக் வாகன வரிவிலக்குகளையும் சலுகைகளையும் நீக்கியதால் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், மஸ்க் அடுத்து என்ன செய்வார்? ட்ரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.