ஒரு நிமிட பட்டா திட்டத்தில் புதிய அப்டேட்.. தமிழகத்தில் பத்திர ஆபீஸ்களில் அடியோடு மாறிய காட்சி

By Keerthana

Published:

தமிழகத்தில் ஒரு நிமிட பட்டா திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பத்தி ஆபீஸ்களில் கிராமப்புற வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா வழங்கப்படுகிறது.

தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டம் தொடங்கி உள்ளது.‘ இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு நிமிட பட்டா திட்டத்தை, தமிழக அரசு விரிவாக்கம் செய்து உள்ளது. அதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் மூலம் இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கி உள்ளது.

தமிழக அரசின் உத்தரவு காரணமாக பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மாற்றம் செய்யும் பணிகள் தற்போது முழு அளவில் நடக்கிறது. உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்படுகிறது.. இந்த நிலையில் அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில் https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளத்தை மேம்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 317 தாலுகாக்களில் 17 தாலுகாக்கள் முற்றிலும் நகர்புறத்தில் உள்ளது. இது தவிர மீதமுள்ள 300 தாலுகாவில் முதல்கட்டமாக 220 தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளின் பட்டா விவரங்களை பார்க்க முடியும். இந்த இணையதளம், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. தற்போது 220 தாலுகாவில் உள்ள நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்யும் போதே இனி பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இன்று (நேற்று) முதல் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகள் தடங்கலின்றி நடந்து வருகிறது.

மேலும் உங்களுக்காக...