தமிழக அரசியல் களத்தில் தற்போது மிகப்பாரிய விவாதமாக உருவெடுத்துள்ளது திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான மறைமுக உறவு குறித்த சந்தேகங்களாகும். குறிப்பாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி “ஸ்டாலினும் பிஜேபியும் கள்ள உறவில் இருக்கிறார்கள்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய பின்னரும், எதற்கும் துள்ளிக்குதித்து எதிர்வினை ஆற்றும் திமுக தலைமை இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு திமுகவின் அணுகுமுறையில் ஒருவிதமான மென்மைப்போக்கு தென்படுவதாகவும், பாஜக எதிர்ப்பை அவர்கள் திட்டமிட்டு மழுங்கடித்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மௌனம் என்பது மம்தாவின் குற்றச்சாட்டை திமுக மறைமுகமாக ஒப்புக்கொள்கிறதோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்துள்ளது.
இந்த சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பல முக்கிய நிகழ்வுகள் அடுக்கடுக்காக அரங்கேறி வருகின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக வெளியிடப்பட்ட நாணய வெளியீட்டு விழாவிற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்தது ஒரு சாதாரண நிர்வாக நிகழ்வாக கடந்து போக முடியாது.
பாஜகவை கொள்கை ரீதியாகக் கடுமையாக எதிர்க்கும் ஒரு கட்சி, தன் தலைவரின் விழாவிற்கு தீவிரமான மாற்றுக்கருத்து கொண்ட ஒரு கட்சியின் முன்னணி தலைவரை அழைத்ததும், அவர் கருணாநிதியை புகழ்ந்து பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் “இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை” என்று உருக்கமாக எழுதியதும் அரசியல் சூட்சமம் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக எதிர்ப்பு என்பதை தேர்தலுக்கான ஒரு முகமூடியாக மட்டும் திமுக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் வலுவடைந்துள்ளது.
அரசியல் ரீதியாக கவனித்தால், கடந்த நான்கு ஆண்டுகளாக நிதி ஆயோக் போன்ற முக்கியக் கூட்டங்களை புறக்கணித்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின், 2025-ல் திடீரென அதில் பங்கேற்றது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். அதேபோல, அதானி குழும தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்துச் சென்றதும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற விவகாரங்களுக்கு பிறகு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஏழு முக்கிய தூதுக்குழுக்களில் ஒன்றிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பை எம்பி கனிமொழிக்கு மத்திய மோடி அரசு வழங்கியதும் தற்செயலான நிகழ்வுகளாக தெரியவில்லை. பொதுவாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இத்தகைய கௌரவங்களை பாஜக அரசு அவ்வளவு எளிதில் வழங்குவதில்லை என்ற சூழலில், திமுகவிற்கு வழங்கப்பட்ட இந்த சலுகைகள் திரைமறைவில் ஏதோ ஒரு இணக்கமான சூழல் நிலவுவதையே பறைசாற்றுகின்றன.
மறுபுறம், தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றங்களும் இதில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகின்றன. தமிழகத்தின் தலைமை செயலாளர் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி போன்ற முக்கிய பதவிகளில் தேர்தல் ஆணையம் செய்த மாற்றங்களை திமுக அரசு பெரிய அளவில் எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. பொதுவாக தங்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் மாற்றப்படும்போது “மத்திய அரசு மாநில உரிமைகளை பறிக்கிறது” என்று முழக்கமிடும் திமுக, இந்த முறை அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் 600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற நிலையில், தமிழகத்தில் நடந்த மாற்றங்களுக்கு திமுக காட்டிய மென்மையான எதிர்வினை, பாஜகவுடனான ஒரு புரிந்துணர்வின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
