வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் அதிமுக கூட்டணியில் இணையக்கூடும் என்றும், அனேகமாக இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து இந்த தேர்தலை திமுகவுக்கு எதிரான ஒரு கடும் சவாலை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில், ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணையுமா அல்லது அதிமுக, தவெக மட்டுமே தனியாக திமுகவை எதிர்க்குமா என்பது குறித்து வரும் நாட்களில் தான் தெளிவாகப் புரிய வேண்டும்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஏற்கனவே சில கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், தற்போது அவர் விஜய் போலவே துணை முதல்வர் பதவியும் கேட்க இருப்பதாக கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில், அக்கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி முன்வருவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, இந்த முறை தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா என்பதும் சந்தேகத்திற்குரியது.
ஏற்கனவே, ராஜ்யசபா தேர்தலில் எம்.பி. சீட் வேண்டும் என்று பிரேமலதா கோரிக்கை விடுத்தது அதிமுகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்க்குமா என்பதே சந்தேகமாக இருக்கும் நிலையில், அதற்குள் பிரேமலதா துணை முதல்வர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்து இருப்பதாக வெளிவந்த செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.