தமிழக அரசியல் களத்தில் பல தசாப்தங்களாக அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக விளங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்பொழுது சந்தித்து வரும் தொடர் சரிவுகளுக்கும் பலவீனங்களுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த சில அதிரடியான மற்றும் தன்னிச்சையான முடிவுகளே முதன்மைக் காரணம் என்ற விமர்சனங்கள் வலுவாக எழுந்துள்ளன.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், அவர் மேற்கொண்ட பல அரசியல் நகர்வுகள் தற்பொழுது கட்சிக்கே வினையாக முடிந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகள் ஒன்றா இரண்டா என்று பட்டியல் போடும் அளவுக்கு, கடந்த சில ஆண்டுகளில் அவர் எடுத்த முடிவுகள் ஒவ்வொன்றும் அதிமுகவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்துள்ளன என்று அரசியல் கணக்குகள் காட்டுகின்றன.
இதில் முதலாவதாக பார்க்கப்படுவது, பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலையுடனான அரசியல் மோதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விளைவுகள் ஆகும். அண்ணாமலையின் ஆக்ரோஷமான அரசியல் அணுகுமுறையை எதிர்கொள்ள முடியாமல், அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன் பின்னணியில், டெல்லி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி பல்வேறு வழிகளில் முயன்றதாக கூறப்படும் அரசியல் நகர்வுகள், இறுதியில் அதிமுகவிற்கு பெருத்த பின்னடைவையே தந்தன. இந்த மோதல் போக்கின் காரணமாக, பாரம்பரியமாக அதிமுகவிற்கு ஆதரவாக இருந்த தேசியவாத மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி அக்கட்சியை விட்டு முற்றிலும் விலகத் தொடங்கியது.
அடுத்ததாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதும், பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழலில் அவர் மன்னிப்பு கேட்க கூட தயாராக இருந்தபோதும் அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்ததும் ஒரு மாபெரும் அரசியல் தவறாக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் அதிமுகவிற்கிருந்த மிக வலுவான வாக்கு வங்கிக்கு ஓபிஎஸ் ஒரு முக்கிய முகமாகத் திகழ்ந்தார். அவரை முழுமையாக புறக்கணித்ததன் மூலமும், கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியதன் மூலமும் அதிமுகவின் தென் மண்டலக் கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டது. மன்னிப்பு கேட்க தயார் என்று இறங்கி வந்த ஒரு தலைவரை தனது ஈகோ காரணமாக சேர்க்க மறுத்த எடப்பாடியின் முடிவு, தென் மாவட்ட வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி, அக்கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை உண்டாக்கியது.
இவை அனைத்திற்கும் மேலாக, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத தூணாகவும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து மூத்த தலைவராகவும் விளங்கிய கே.ஏ. செங்கோட்டையனை முக்கிய பொறுப்புகளில் இருந்தும், கட்சி அதிகாரத்தில் இருந்தும் ஓரங்கட்டியது எடப்பாடி பழனிசாமி செய்த மற்றுமொரு இமாலய தவறாகும். கொங்கு பகுதியில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்கு பெற்ற செங்கோட்டையனை போன்ற ஒரு மூத்த தலைவரை தகுந்த காரணங்களின்றி நீக்கியது, கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலம் தான் எப்போதும் அதிமுகவின் மிக முக்கியமான மற்றும் உறுதியான வாக்கு வங்கியாக இருந்து வந்துள்ளது; ஆனால் அங்குள்ள மூத்த தலைமைகளையே பலவீனப்படுத்தியதன் மூலம், அதிமுக தனது சொந்தக் கோட்டையிலேயே தனது செல்வாக்கை இழக்க நேரிட்டது.
அரசியல் விமர்சகர்களின் துல்லியமான கணிப்புப்படி, எடப்பாடி பழனிசாமி செய்த இந்த ஒவ்வொரு தவறான முடிவுக்கும், ஒவ்வொரு சதவீத வாக்கு வங்கியை அதிமுக தொடர்ந்து இழந்து கொண்டே வந்துள்ளது. அண்ணாமலையுடனான கூட்டணி முறிவு, ஓபிஎஸ்ஸின் நீக்கம், செங்கோட்டையன் போன்ற கொங்கு பகுதி மூத்த தலைவர்களின் புறக்கணிப்பு என ஒவ்வொரு நகர்வும் அதிமுகவின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை மிகக் கொடூரமாகப் பாதித்துள்ளது. கடந்த கால பொதுத்தேர்தல் தோல்விகள் மற்றும் வாக்கு சதவீத சரிவுகள் யாவும் இந்தத் தவறுகளின் நேரடி விளைவுகளே என்பதைத் தொண்டர்கள் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை தற்பொழுது நன்றாகவே உணரத் தொடங்கியுள்ளனர்.
முடிவாக, தற்போதைய இக்கட்டான அரசியல் சூழலில், தமிழ்நாட்டில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் அதிமுகவின் வாழ்வா சாவா என்ற இறுதி போராட்டக் களமாக மாறியுள்ளன. ஏற்கனவே நாலாபுறமும் பலவீனமடைந்து, வாக்கு வங்கியை இழந்து தவிக்கும் அதிமுக, இந்த இடைத்தேர்தலிலும் மிக மோசமான தோல்வியை தழுவினால், தமிழ்நாட்டின் அரசியல் வரைபடத்தில் இருந்தே அக்கட்சி முற்றிலும் காலியாவது நூறு சதவீதம் உறுதி என்றே தோன்றுகிறது. எடப்பாடி பழனிசாமியின் தவறான அரசியல் உத்திகளும், தவெக போன்ற புதிய மாற்று சக்திகளின் அசுர வேக எழுச்சியும் இணைந்து, அதிமுகவை மீண்டெழ முடியாத ஒரு பாதாளத்தை நோக்கித் தள்ளியுள்ளன; இந்த இடைத்தேர்தல் முடிவு மட்டுமே அதன் இறுதித் தீர்ப்பாக அமைய போகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
