2026 தமிழகச் சட்டமன்ற தேர்தலின் வேட்பாளர் தேர்வு விவகாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ-க்களான ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதும், கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் அவர் பணியாற்றி வந்த தொகுதியிலிருந்து அதிரடியாக மாற்றப்பட்டதும் கட்சிக்குள் ஆழமான விரிசலை ஏற்படுத்தியுள்ளன. ‘தேர்தலுக்குப் பின் அனைத்தும் சரியாகிவிடும்’ என்று தலைமை நம்பினாலும், கட்சியின் உயர்நிலைக்குழுவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியின் உச்சத்தில் இருப்பதால், அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறும் முடிவில் இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, காட்டுமன்னார்கோயில் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக செயல்பட்டு, மீண்டும் அங்கு போட்டியிட தயாராக இருந்த பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், கடைசி நேரத்தில் செய்யூர் தொகுதிக்கு மாற்றப்பட்டதால் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளார். பனையூர் பாபு தயார் செய்து வைத்திருந்த தொகுதியில் தன்னை நிறுத்தியது, தனக்கு வழங்கப்பட்ட ஒரு தண்டனை என்றும், தான் எளிதாக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே தலைமை இப்படி செய்ததாகவும் அவர் தனது ஆதரவாளர்களிடம் கண்ணீர் மல்க வருந்தியுள்ளார். கட்சி தலைமை மீது வருத்தம் இருந்தாலும் சிந்தனை செல்வன் தொடர்ந்து பயணிப்பார் என்று சொல்லப்பட்டாலும், மற்றொரு முக்கிய புள்ளியான பனையூர் பாபு வி.சி.க-விலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
பனையூர் பாபுவின் அதிருப்திக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், தலைமையின் ‘சந்தேகப் பார்வை’ மற்றும் புறக்கணிப்பும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்த எஸ்.எஸ்.பாலாஜிக்கு பொருளாளர் பதவியும், ஷாநவாஸுக்கு முதன்மை செயலாளர் பதவியும் வழங்கிய திருமாவளவன், பனையூர் பாபுவின் பெயரை திட்டமிட்டு தவிர்த்தது அவரை கொந்தளிக்க வைத்துள்ளது. இத்தனை காலம் கட்சிக்கு பக்கபலமாக இருந்தும் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கருதும் பாபு, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரு பெரும் படையோடு கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்றொரு புறம், ஆளூர் ஷாநவாஸை தங்கள் பக்கம் இழுக்க திமுக நீண்டகாலமாக திட்டம் போட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020-லேயே இதற்கான முயற்சிகள் நடந்த நிலையில், தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி, சமீபத்தில் பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதை முன்கூட்டியே அறிந்த திருமாவளவன், ஷாநவாஸை தக்கவைத்து கொள்ள நள்ளிரவிலேயே அவருக்கு முதன்மை செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளார். இருப்பினும், ஷாநவாஸ் தொடர்ந்து வி.சி.க-விலேயே நீடிப்பார் என்பதை தலைமையால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
பொதுவாகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இணைய விரும்பினால் அதை தவிர்ப்பது திமுகவின் வழக்கம் என்றாலும், வி.சி.க-வின் முக்கிய முகங்களுக்கு மட்டும் திமுக ‘சிவப்பு கம்பளம்’ விரிக்க தயாராக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வி.சி.க நிர்வாகிகள் யாரும் திமுகவிற்கு வர விரும்பினால் அதற்கு தடை இருக்காது என்ற சிக்னல் கொடுக்கப்பட்டிருப்பது திருமாவளவனை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த உள்விவகார விரிசல்கள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வி.சி.க-வின் கட்டமைப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையோ அல்லது பிளவையோ ஏற்படுத்தக்கூடும் என்பது நிதர்சனமாக தெரிகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
