பொள்ளாச்சி ஆம்னி பஸ்ஸில் பொல்லாத வேலை.. டிரைவரின் செயலால் ஆடிப்போன மக்கள்

Published:

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி 50 பயணிகளுடன் ஆம்னி பேருந்தை டிரைவர் ஒருவர் மது போதையில் ஒட்டி சென்றார். பல்லடம் அருகே பேருந்து தள்ளாடியபடி சென்ற நிலையில், டிரைவரிடம் சென்று பார்த்தனர். டிரைவர் மது போதையில் வாகனத்தை தள்ளாடியபடி ஓட்டி சென்றார். இதையடுத்து பேருந்தை நிறுத்தி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவரை போலீசார் பிடித்து சென்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து- கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு ஆம்னி பேருந்து ஒன் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சென்று கொண்டிருந்தது. 50 பயணிகளுடன் சென்ற பேருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் சென்ற போது, திடீரென தாறுமாறாக தள்ளாடியபடி ஓடியது. உறங்கி கொண்டிருந்த பயணிகள் விழித்து எழுந்ததுடன், ஏன் இப்படி ஆனது என டிரைவரிடம் போய் பார்த்தனர்.

அங்கு ஓட்டுநர் போதையில் நிலைதடுமாறியபடி பேருந்தை ஓட்டி சென்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடடியாக பேருந்தை நிறுத்திய பயணிகள், டிரைவரை சிறைபிடித்ததுடன், அங்கு சோதித்தனர். அவர் ஜூஸ் பாட்டிலில் மதுபானத்தை கலந்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனிடையே போலீசார் வருவதற்குள் மது போதையில் இருந்த டிரைவரை பயணிகள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் மது போதை டிரைவர் வெங்கடாசலபதியை தரையில் உட்கார வைத்தனர். இதனிடையே பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார் மற்றும் பல்லடம் நகர போலீசார் விசாரணை நடத்தினர்.

பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார் உத்தரவின் பேரில் டிரைவர் வெங்கடாஜலபதி ( 32 வயது) என்பவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த சோதனையில் டிரைவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.   இதையடுத்து பயணியர், மாற்று பஸ் மூலம் பத்திரமாக பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.  இதனிடையே ‘டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என டி.எஸ்.பி., விஜிகுமார் உறுதி அளித்தார். இதன்படி ஓட்டுர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...