திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைத்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தற்போதைய கள நிலவரப்படி திமுக கூட்டணிக்கு வெறும் 110 தொகுதிகள் மட்டுமே சாதகமாக இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை விட குறைவாக இருப்பதால், முதலமைச்சர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார். குறிப்பாக, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் பலரது செயல்பாடு திருப்திகரமாக இல்லாததும், அவர்கள் மீதான மக்கள் அதிருப்தியும் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சென்னை போன்ற திமுகவின் கோட்டை என கருதப்படும் பகுதிகளில் கூட இந்த முறை கடும் சவால்கள் நிலவுவது தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. உளவுத்துறை அறிக்கையின்படி, திருவிக நகர், ராயபுரம், தி.நகர், வேளச்சேரி மற்றும் அம்பத்தூர் போன்ற தொகுதிகள் திமுகவின் கையை விட்டு போகும் நிலையில் உள்ளதாக தெரிகிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளிலேயே இழுபறி நிலை நீடிப்பது நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக வலுவாக இருக்கும் துறைமுகம், எழும்பூர் மற்றும் முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. சென்னையை தாண்டி கொங்கு மற்றும் தென் மாவட்டங்களிலும் சுமார் 20 சிட்டிங் தொகுதிகளை திமுக இழக்கக்கூடும் என்ற கணிப்பு முதலமைச்சரை நேரடியாகக் களமிறங்கத் தூண்டியுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு வழங்காததும், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்களுமே இந்த சறுக்கலுக்கு முதன்மை காரணங்களாக சொல்லப்படுகின்றன. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசியல் வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பிரிக்கப்போகும் வாக்குகள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு பெரிய புதிராகவே நீடிக்கிறது. தென் மாவட்டங்களில் விஜய்க்கு கிடைத்துள்ள வரவேற்பு திமுகவின் வாக்கு வங்கியில் கைவைத்துவிடக் கூடாது என்பதில் தலைமை மிக கவனமாக உள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக மற்றும் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ், டெல்டாவில் வைத்தியலிங்கம் ஆகியோரின் தாக்கம் திமுகவின் வெற்றியை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது சாதகமாக உள்ள 110 தொகுதிகளுடன் கூடுதலாக 70 முதல் 80 தொகுதிகளை தீவிரமாகக் கண்காணித்து, அவற்றில் எப்படியாவது வெற்றியை பெற வேண்டும் என்பதே திமுகவின் தற்போதைய இலக்காக உள்ளது. ஏப்ரல் 18 அன்று இன்னொரு உளவுத்துறை அறிக்கைகளை பெற்று, அதன் அடிப்படையில் தேர்தல் வியூகங்களை உடனுக்குடன் மாற்றியமைக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். திமுகவின் இந்த தீவிர முயற்சியும், முதலமைச்சரின் நேரடி தலையீடும் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
