பிரிமிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பிரம்மாண்டமான 587 ரன்களை குவித்தது. இதில் சுப்மன் கில்லின் ஆட்டம், அவரது டெஸ்ட் வாழ்க்கையின் பொற்கால அத்தியாயமாக அமைந்தது. இன்று நடந்த இந்த ஆட்டத்தில், நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கிய கில், 387 பந்துகளை சந்தித்து, 30 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 269 ரன்களை குவித்து எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இந்த ஒரே இன்னிங்ஸில் அவர் 13 பேட்டிங் சாதனைகளை முறியடித்து அசத்தினார். அந்த சாதனைகள் இதோ:
1. சேனா (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஒரு இந்திய வீரர் எடுத்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை சுப்மன் கில் இப்போது தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன், 2004-ல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் எடுத்த 241 ரன்களே சாதனையாக இருந்தது.
2. இன்றைய ஆட்டத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இந்திய கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர் என்ற விராட் கோலியின் சாதனையை கில் உடைத்தார். 2019 அக்டோபரில் புனேவில் நடந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்டில், கோலி கேப்டனாக 254 ரன்கள் எடுத்திருந்தார்.
3. இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வெளிநாட்டு டெஸ்ட் கேப்டன் கில். ஆஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன் (1964-ல் 311 ரன்கள்) மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் (2003-ல் 277 மற்றும் 259 ரன்கள்) இவருக்கு முன் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
4. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 250-க்கும் அதிகமான ஸ்கோர்களை பதிவு செய்த மூன்றாவது இந்திய வீரர் கில். இதற்கு முன் சேவாக் (முல்தானில் 309, லாகூரில் 254) மற்றும் டிராவிட் (ராவல்பிண்டியில் 270) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
5. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த ஆறாவது இந்திய கேப்டன் கில். எம்.ஏ.கே. பட்டோடி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, மற்றும் விராட் கோலி (ஏழு முறை) ஆகியோர் இந்த சாதனையை ஏற்கனவே நிகழ்த்தியுள்ளனர்.
6. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இளம் இந்திய கேப்டன் கில் (25 வயது 298 நாட்கள்) ஆவார். எம்.ஏ.கே. பட்டோடி (23 வயது 239 நாட்கள்) இவருக்கு முன் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
7. இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் கில். முகமது அசாருதீன், திலீப் வெங்சர்க்கர் மற்றும் ராகுல் டிராவிட் (இரண்டு முறை) ஆகியோர் இவருக்கு முன் இந்த வரிசையில் உள்ளனர்.
8. இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்ட் சதங்கள் அடித்த மூன்றாவது இந்திய கேப்டன் கில். விஜய் ஹசாரே மற்றும் அசாருதீன் ஆகியோர் இவருக்கு முன் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
9. கேப்டனாக முதல் டெஸ்டில் சதம் அடித்தும், கேப்டனாக இரண்டாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்தும் இரண்டாவது இந்திய வீரர் கில். சுனில் கவாஸ்கர் இவருக்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
10. சேனா நாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் கில். இதற்கு முன், 2011-ல் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் திலகரத்ன தில்ஷான் எடுத்த 193 ரன்களே சிறந்த ஸ்கோராக இருந்தது.
11. வெளிநாட்டு டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டன் கில். 2016 ஜூலையில் நார்த் சவுண்டில் நடந்த இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்டில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 200 ரன்கள் எடுத்தார்.
12. இங்கிலாந்தில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் என்ற சாதனையை கில் இப்போது தன்வசப்படுத்தியுள்ளார். 1979-ல் தி ஓவலில் சுனில் கவாஸ்கர் எடுத்த 221 ரன்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
13. இன்று கில் எடுத்த 269 ரன்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற கோலியின் சாதனையை (2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 254) முறியடித்தார்.
சுப்மன் கில்லின் இந்த அற்புதமான ஆட்டம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. அடுத்து என்னென்ன சாதனைகளை அவர் முறியடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுக்களையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணி தற்போது 515 ரன்கள் பின் தங்கியுள்ளது.