2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியினர் கோப்பையை கைப்பற்றியதும், விராட் கோலியை அனைவரும் ஹீரோ போல் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால் அடுத்த நாளே, பெங்களூரின் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மன வருந்தத்தக்க நிகழ்வில் 11 பேர் உயிரிழந்த நிலையில், விராட் கோலியை அனைவரும் வில்லனாக பார்க்க தொடங்கிவிட்டனர்.
36 மணி நேரத்தில் ஹீரோவாக ரசிகர்கள் கண்ணுக்கு தெரிந்த விராட் கோலி, திடீரென வில்லனாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு திரும்பிய உடனே, இரண்டு நாள் கழித்து வெற்றி கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் ஆர்சிபி அணியின் திட்டமாக இருந்தது. ஆனால் விராட் கோலிக்கு மறுநாளே லண்டன் செல்ல வேண்டிய பயணத் திட்டம் இருந்ததால், உடனடியாக வெற்றி கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும், அதனால்தான் அவசர அவசரமாக இந்த வெற்றி கொண்டாட்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெளியே லட்சக்கணக்கான மக்கள் நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாகும் நேரத்தில், உள்ளே விராட் கோலி மற்றும் அவரது அணியினர் மகிழ்ச்சியாக வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர் என்று குற்றம் சுமத்தும் ரசிகர்கள், குறைந்தபட்சம் தனது நிகழ்ச்சியால் 11 பேர் உயிரிழந்தனர் என்பதை கூட கண்டுகொள்ளாமல் விழா முடிந்ததும் அவர் லண்டன் சென்றது தான் அவரது கொடூரத்தின் உச்சமாகத் தெரிகிறது என்று கூறுகின்றனர்.
“லண்டன் பயணத்தை சிறிது ஒத்திவைத்துவிட்டு, உயிரிழந்த ரசிகர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியிருக்கலாம். ஆனால் அதைக்கூட செய்யாமல், சுயநலமாக லண்டன் செல்லவே அவர் திட்டமிட்டிருந்தார். அவரை கைது செய்ய வேண்டும். எந்த நிறுவனங்களும் அவரை பிராண்டாக பயன்படுத்தக்கூடாது. இனி அவரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க கூடாது” என்பது போன்ற கருத்துக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில், விராட் கோலிக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இந்த விபத்து நடக்க பலருடைய அலட்சியங்கள் காரணம். குறிப்பாக அரசு கவனக்குறைவால் இது நேர்ந்தது. அதை விட்டுவிட்டு விராட் கோலியை மட்டும் குறை சொல்வதை ஏற்க முடியாது” என்றும் கூறி வருகின்றனர்.