ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, பாகிஸ்தானில் செயல்பட்டு கொண்டிருந்த ஜெய்ஷ்-எ-முகம்மதின் தலைமை அலுவலகம் முழுமையாக அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது. ஆனால் தற்போது கூகுள் மேப்பில் அந்த அலுவலகம் “நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது” என்று காட்டப்படுவதை அடுத்து, “அந்த பயம் இருக்கணும்” என்று பல இந்தியர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள பகவல்பூர் என்ற பகுதியில் தான் ஜெய்ஷ்-எ-முகம்மதின் பயங்கரவாத தலைமையகம் செயல்பட்டு வந்தது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பிறகு, இந்த இடம் குப்பைக் கோலங்கள் மற்றும் சிதைந்த கட்டடங்களாக மட்டுமே காணப்பட்டது.
இந்த நிலையில், இந்த இடத்தை கூகுள் மேப்பில் தேடி பார்த்தால், “அலுவலகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது” என்று காண்பிக்கிறது. கூகுள் மேப்ஸ் ஏன் இவ்வாறு காண்பிக்கிறது என்றால், பயனர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில், அல்காரிதம் செயல்படாத இடம் என்று கணிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
கூகுள் ஒரு இடத்தை ஆய்வு செய்யும்போது, அங்கு நேரடியாக ஆய்வு மேற்கொள்வதில்லை. என்றாலும், சில நம்பத்தகுந்த உள்ளூர் வழிகாட்டிகள், அந்த இடத்தை தேடுபவர்கள், புகார்கள், உரிமையாளரின் செயல்பாடுகள், மற்றும் அந்த இடம் செயலிழந்துள்ளது போன்ற தகவல்களின் அடிப்படையில் தான், “நிரந்தரமாக மூடப்பட்டது” என்று காட்டுகிறது.
அந்த வகையில், ஜெய்ஷ்-எ-முகம்மதின் தலைமை அலுவலகம் மூடப்பட்டது என்று கூகுள் மேப்ஸில் காண்பிக்கப்பட்டது. இதன் மூலம், அந்த அலுவலகம் தற்போது இயங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது, நிதி உதவி பெறுவது, முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவை உள்பட பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. இங்குதான் ஜெய்ஷ்-எ-முகம்மதின் நிறுவனர் மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில், மசூத் அசரின் குடும்பத்தில் சேர்ந்த 13 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. லாஹூரில் இருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகவல்பூரில் இருந்து முழுக்க முழுக்க ஜெய்ஷ்-எ-முகம்மதின் இயக்கம் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
18 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த இடம் தற்போது சிதைந்து காணப்படுவதாகவும், இங்கு மீண்டும் அலுவலகம் ஆரம்பிக்க எந்தவிதமான சூழலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
2002 ஆம் ஆண்டு, இந்த இயக்கம் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தானில் மட்டும் சுதந்திரமாக இயங்கி வந்தது என்பதும், அதன் நிறுவனர் மசூத் அசார் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் சுற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பலமுறை இந்தியா அவரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிய போதிலும், “அவர் பாகிஸ்தானில் இல்லை” என்ற பதிலையே பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.