இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி அசாதாரணமான ரன் சேசிங் மூலம் வெற்றி பெற்றது. 371 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்த பிறகும் இந்தியா தோல்வியடைந்ததால், இணையத்தில் மீம்ஸ் மழை பொழிந்து, ரசிகர்கள் இந்திய அணியை கிண்டல் செய்தனர்.
டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் 82 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இந்த இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடித்தது. இந்த தொடருக்கு முன்னதாகவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இல்லாதது குறித்து பலரும் வருத்தம் தெரிவித்த அதே வேளையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்கு கேட்சுகளை கோட்டைவிட்டதற்காகவும் சிலர் கிண்டல் செய்தனர். அதில் ஒன்று 5 ஆம் நாளில் முக்கியமான கட்டத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடுகளுக்கு இடையே மீண்டும் மீண்டும் மத்தியஸ்தம் செய்வதாகக் கூறி வரும் கருத்துகளை கிரிக்கெட்டுடன் இணைத்து பயனர்கள் கிண்டல் செய்தனர்.
ஒரு பயனர் X தளத்தில், “இன்னும் நம்பிக்கை இருக்கிறது. டிரம்ப் தலையிட்டு இந்தியா மற்றும் இங்கிலாந்தை டிரா செய்ய சம்மதிக்க வைக்கலாம்,” என்று எழுதினார்.
“இந்தியாவிற்கு 5 சதங்கள் எடுத்ததற்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்,” என்று ‘திண்டா அகாடமி’ என்ற கிண்டல் பக்கம் பதிவிட்டிருந்தது. மற்றொரு பயனர் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவை இந்த போட்டியில் மிஸ் செய்து, “பசங்ககிட்ட விட்டா என்ன ஆகுது பாரு” என்ற தலைப்புடன் ஒரு AI படத்தை பதிவிட்டார்.
ஒரு பயனர், போட்டி நடக்கும்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் பவுண்டரி கோட்டின் அருகே நடனமாடிய காணொளியைப் பகிர்ந்து, அவர் கேட்சுகளை கோட்டைவிட்டதற்காக கிண்டல் செய்தார்.
“யஷஸ்வி ஜெய்ஸ்வால் நடனமாடுகிறார், ஏனெனில் அவர் ஏற்கனவே 6+ கேட்சுகளை கோட்டைவிட்டு இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டியை வெல்ல போதுமான உதவிகளை செய்துவிட்டார்,” என்று அந்த பயனர் கூறினார். “100 ரன்கள் அடிச்சிருக்கான், ஆனா 200 ரன்கள் மதிப்புள்ள 5 கேட்சுகளை தவறவிட்டுருக்கான்,” என்று ஒரு நெட்டிசன் எழுதினார். முக்கியமான கேட்சுகளை தவறவிட்டு இந்தியாவின் வெற்றிக்கு பத்த வச்சிட்டியே பறட்டை என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.
இந்தியாவுக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்ட முக்கியமான தருணத்தில், ஜெய்ஸ்வால் பென் டக்கெட்டை 97 ரன்களில் தவறவிட்டார். இதன் விளைவாக, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் 149 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் ஏற்கனவே ஆலி போப், டக்கெட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோருக்கு முறையே 15, 60 மற்றும் 83 ரன்களில் இருந்தபோது கேட்சை தவறவிட்டு அவர்களுக்கு வாழ்வு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.