அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறினால், விஜய்யின் தமிழக வெற்றி கழகமும், விசிகவும் கூட்டணிக்கு வருவது உறுதியானால், பாஜக ‘தேங்க்யூ’ சொல்லிவிட்டு கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை பொறுத்தவரை, தமிழகத்தில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்; அதுமட்டுமின்றி அரசியலை விட்டே ஓட விட வேண்டும் என்பதுதான் முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இப்போதைக்கு ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வலுவாக இருப்பதால், இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றை ஒழித்தால் மட்டுமே பாஜக குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாக வர முடியும்.
இந்த நிலையில், திமுகவை முதலில் வரும் தேர்தலில் தோற்கடித்துவிட்டு, அதன் பிறகு வழக்குகள் மேல் வழக்குகள் போட்டு மொத்தமாகவே திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாக உள்ளது. சனாதன எதிர்ப்பில் தீவிரமாக இருக்கும் திமுகவை ஒன்றும் இல்லாமல் செய்துவிட வேண்டும் என பாஜக கங்கணம் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியை மேலும் பலப்படுத்த சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ‘பாஜக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என இரண்டு கட்சிகளுமே உறுதியாக உள்ளன.
இந்தச் சூழலில், “நமக்குத் தேவை திமுக தோல்வி அடைய வேண்டும். அது நடப்பதற்கு அதிமுக கூட்டணியில் விஜய் மற்றும் விசிக வருவதாக இருந்தால், நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறத் தயார்,” என்று பாஜக அறிவிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அப்படி மட்டும் நடந்தால், அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் என்றும், இந்த கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி அரசு அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதுமட்டும் நடந்தால் ’ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.