நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே அணி வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, குறைந்த ஸ்கோரை பதிவு செய்த நிலையில், கொல்கத்தா அணி 10.1 ஓவர்களிலேயே அந்த இலக்கை எளிதாக எட்டியது.
இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக, முன்னாள் சிஎஸ்கே வீரர்களான டுவெய்ன் பிராவோ மற்றும் மொயின் அலி ஆகியோர் கொல்கத்தா அணியில் இருப்பதே என கூறப்படுகிறது. பல ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் விளையாடியுள்ள பிராவோ, அந்த அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேன் மற்றும் தோனியின் திட்டங்களை நன்கு அறிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மொயின் அலியும் சிஎஸ்கே அணியின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்தவர். இந்த தகவல்களை பயன்படுத்தி, சரியான நேரத்தில் இருவரும் சரியான வியூகத்துடன் செயல்பட்டனர். அதனால் சிஎஸ்கே அணியின் விக்கெட்டுகளை தொடர்ந்து வீழ்த்தி, அந்த அணி முற்றிலுமாக சரிந்து போகும்படி செய்தனர் என்று கூறலாம்.
மொத்தத்தில், சிஎஸ்கேவிற்கு எதிராக பிராவோ மற்றும் மொயின் அலி சேர்ந்து அமைத்த வியூகம் வெற்றிக்கு காரணமாகும் என கூறப்படுகிறது. அவர்களின் திட்டங்களை சரியாக செயல்படுத்திய கேப்டன் ரஹானேவுக்கு இந்த வெற்றி மிக எளிதாக கிடைத்தது.
“நாங்கள் இந்த மைதானத்தில் சிஎஸ்கே 170 முதல் 180 ரன்கள் வரை அடிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மொயின் அலி சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அதன் பின்னர், பிராவோ கொடுத்த அடுத்தடுத்து திட்டங்கள் மூலம் எங்களால் இந்த வெற்றியை பெற முடிந்தது.” என கொல்கத்தா கேப்டன் ரஹானே தெரிவித்தார்.
இந்நிலையில், தோனி மீண்டும் கேப்டனாக வந்திருந்தாலும், அவரது ராஜதந்திரங்கள் அனைத்தும் இம்முறை தோல்வி அடைந்து விட்டதாக சொல்ல வேண்டும். அதோடு, சிஎஸ்கே அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் வெற்றியைப் பெற வேண்டும் என்ற தீவிரம் அல்லது உத்வேகம் இல்லாதது, ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் பட்டியலில் தற்போது சிஎஸ்கே அணியினர் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் இருக்கிறார்கள். இன்னும் சில போட்டிகளில் தோல்வி அடைந்தால், அவர்கள் நிரந்தரமாகவே கடைசி இடத்தில் முடங்கிப் போவார்கள் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள்.
சிலர், “இனி முழுமையாக அணியை சீரமைக்க வேண்டும், இல்லையெனில் சிஎஸ்கே ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விடலாம்” என்று கடுப்புடன் கூறி வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.