ஹாட்ரிக் பதக்கங்கள் பெற்று பாராலிம்பிக்கில் வரலாறு படைத்த மாரியப்பன்.. வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்…

By John A

Published:

தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளிலும் பங்கு பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என அடுத்தடுத்து பதக்கங்களைப் பெற்று ஹாட்ரிக் சாதனை புரிந்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் நேற்று உயரம் தாண்டுதல் போட்டியில் சேலம் ஓமலூர் அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் ஆடவர் T63 உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். இவருக்கு நாடுமுழுவதும் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சிறுவயதியே தன் தந்தை இவரது குடும்பத்தினை விட்டுச் சென்றதால் தாயின் பராமரிப்பில் நான்கு சகோதரர்கள், இரு சகோதரிகளுடன் வறுமையில் படித்திருக்கிறார் மாரியப்பன். இவரது தாய் செங்கல் சூளையில் பணிபுரிந்தும், காய்கறிகளை விற்றும் கிடைத்த சொற்ப வருமானத்தில் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்.

மாரியப்பனுக்கு 5 வயதாகும் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் வலது கால் மூட்டு நசுங்கி அவருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டிருக்கிறது. சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் பொருட்டு தமது பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியரால் உத்வேகம் பெற்று தடகளப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றிருக்கிறார். தொடர்ந்து தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பும் பயின்றார். இவரது தடகளத் திறமையைப் பார்த்த பயிற்சியாளர் சத்யநாரயணன் இவருக்கு பெங்களுரில் முறையான பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அதுவும் நிலம் வாங்குவதற்காக.. விண்ணப்பிப்பது எப்படி?

இதனைத் தொடர்ந்து மாநில தேசியப் போட்டிகளில் ஜொலிக்க ஆரம்பித்தார் மாரியப்பன், மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி வாகை சூட, ஒலிம்பிக் விளையாட்டிலும் தகுதி பெற்றார். கடந்த 2016 ரியோ டிஜெனிரோ ஒலிம்பிக், 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆகியவற்றில் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

தற்போது நேற்று நடைபெற்ற பாரிஸ் பாராலிம்பிக்கில் T63 ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீ தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். முன்னதாக 1.94 உயரம் தாண்டி அமெரிக்க வீரர் தங்கமும், மற்றொரு இந்திய வீரரான ஷரத் 1.88 மீ உயரமும் தாண்டி வெள்ளிப் பதக்கமும் பெற்றார்கள்.

மாரியப்பனின் சாதனைகளை கௌரவிக்கும் பொருட்டு மத்திய அரசு ஏற்கனவே இவருக்கு பத்ம ஸ்ரீ விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகியவற்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...