பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அதுவும் நிலம் வாங்குவதற்காக.. விண்ணப்பிப்பது எப்படி?

Published:

சென்னை: தமிழக அரசு சார்பில் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டம் குறித்து முழுமையாக பார்ப்போம்.

விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூ கநீதியை நிலைநாட்டும் வகையில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ என்ற புதிய திட்டம் கடந்த பட்ஜெட்டின் போது தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பெண்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அதிகபட்சமாக 2½ ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கி கொள்ள அரசு அனுமதித்துள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர் 18 முதல் 55 வயதுக்குள் இருப்பது அவசியம் ஆகும். விண்ணப்பிக்கும் பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கு பெண்ணுக்கு  சொந்தமாக விவசாய நிலம் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவரது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ நிலத்தை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீத முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் வாங்கிய நிலத்தை 10 ஆண்டுகளுக்கு இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது. பயனாளிகள் வங்கி கடன் மூலமாக நிலம் வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் விவசாய நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிர், மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுக வேண்டும். விண்ணப்பம் தற்போது பெறப்படுகிறது

இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் விவசாய நிலம் வாங்கும் இந்த திட்டத்துக்காக 2024-25-ம் நிதியாண்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது மாவட்டம் தோறும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. தகுதியான ஆதிதிராவிட, பழங்குடியின மகளிர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்” என்று கூறினார்.

 

மேலும் உங்களுக்காக...