பெரியவர்களைக் குறிப்பிடும்போது திரு, திருமதி என்ற அடைமொழிகளை இடுகிறோம். இதன் உண்மையான தாத்பரியம் என்னன்னு பலருக்கும் தெரிவதில்லை. வெறும் மரியாதைக்காக என்றே நினைத்துக் கொள்கின்றனர்.
நாம் அடிக்கடி சொல்வது தான் இங்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் ஆழமான பொருளைப் புகுத்தி வைத்து இருப்பார்கள். நாம் நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமான விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பிதற்றி வருகிறோம்.
அதனால் எந்த ஒரு விஷயத்தைப் படிக்கும்போதும் சரி. பார்க்கும் போதும் சரி. அதை எப்போதும் ஆழமான கண்ணோட்டத்துடன் அதன் உட்பொருளை உணர்ந்து பார்க்க வேண்டும். அந்த வகையில் திரு, திருமதி என்று குறிப்பிடுவதன் நோக்கம் என்ன என்றும் இப்போது பார்க்கலாம்.
பெரியவர்களின் பெயருடன் “திரு’ “திருமதி’ என்றோ அல்லது “ஸ்ரீ’ “ஸ்ரீமதி’ என்று சேர்த்து சொல்வர். இதற்கான காரணம் தெரிந்தால் அதன் அருமை புரியும். செல்வத்திற்கு அதிபதி திருமகளாகிய லட்சுமி. இவளை “ஸ்ரீதேவி’ என்றும் குறிப்பிடுவர். நாராயணரின் மார்பில் லட்சுமி நித்ய வாசம் செய்வதால் அவருக்கு “ஸ்ரீநிவாசன்’ என்று பெயர்.
மாலவனோடு லட்சுமி இணை பிரியாமல் எப்போதும் இருக்கிறாள் என்பதால், “திரு.. மால்’ என்று பெயர். பெரியவர்களைக் குறிப்பிடும் போது, மரியாதை கருதி மட்டும் “திரு’ சேர்ப்பதில்லை. திருமகளின் அருளும், பொருளும் அவர்களைச் சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அடைமொழியைச் சேர்க்கிறோம்.