ஆடி மாதத்தில் இவ்ளோ சிறப்புகளா? எல்லாம் சரி… திருமணத்தைத் தவிர்ப்பது எதுக்குன்னு தெரியுமா?

Published:

ஆடி மாதம் இன்று அமர்க்களமாகப் பிறந்துள்ளது. இந்த மாதம் அம்மனுக்கு உரிய மாதம். எங்கு பார்த்தாலும் பகல் வேளையிலும், மாலை வேளையிலும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள்.

இந்த மாதத்தில் தான் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை (4.8.2024), ஆடி பௌர்ணமி என அத்தனை விசேஷங்களும் வருகின்றன.

இந்தக் கூழ் ஊற்றுவது எதற்காக என்று கேட்பார்கள். அது ஒரு நேர்த்திக்கடன். அதை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். அது தவிர அந்தக் காலத்தில் கூழ் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.

அதே போல பொங்கல் வைப்பது, மாவிளக்கு படைப்பது, பால் குடம் எடுப்பது, பூக்குழி இறங்குவது என பக்தர்கள் பரவசமாக அம்மனை வேண்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதைப் பார்க்கும் போது நமக்குள் பக்தி பெருக்கு ஊற்றெடுக்கும்.

Aadi amavasai
Aadi amavasai

அதற்காகவே பக்தர்கள் அம்மன் கோவில்களுக்குச் சென்று வழிபடுவர். சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

ஆடி மாதத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்த மாதம் பிறக்கும் போது தான் தட்சணாயன காலம் தொடங்குகிறது. இது மார்கழி வரை நீடிக்கிறது. இந்தக் காலகட்டங்களில் தான் பக்தர்கள் பலரும் காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள புண்ணிய தலங்களில் உள்ள புனித நதிகளில் நீராடுவர்.

ஆடி மாதத்தில் தான் கிராமப்புற காவல் தெய்வங்களான மாரியம்மன், மதுரை வீரன், அய்யனார், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கடவுள்களை வழிபடுவதுண்டு. அந்தக் காலகட்டத்தில் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் நடக்கும்.

அதே போல நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் நடக்கும் ஆடித்தபசு இந்த மாதத்தில் தான் நடக்கிறது. அது வரும் ஞாயிறு அன்று (21.07.2024) அன்று வருகிறது.

அதே போல ஆடி அமாவாசை இந்த மாத்தின் சிறப்புக்குரிய நாள். அந்த நாளில் பிதுர் கடன் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது பெரும் புண்ணியத்தைத் தரும். அதே போல ஆடி பௌர்ணமி அன்று தான் ஹயக்ரீவரின் அவதாரம் என்பதால் வைணவ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்த மாதத்தில் எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றுவார்கள். இதை வீட்டில் ஏற்றக்கூடாது. கோவிலில் ஏற்றினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆடி மாதம் வரும் சுக்ல பட்ச ஏகாதசி தொடங்கி கார்த்திகை மாதம் வரும் சுக்ல பட்ச ஏகாதசி வரை விரதம் இருப்பது குடும்பத்தில் அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும்.

ஆடி மாதம் சுக்ல தசமி வரும். அப்போது திக் தேவதா விரதம் இருந்து திக்தேவதைகளை அந்தந்த திசைகளில் வணங்கி வழிபட நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

அதே போல ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் இருந்து கார்த்திகை மாதம் வரும் வளர்பிறை துவாதசி வரை பெண்கள் விரதம் இருந்து துளசி பூஜை செய்தால் நினைத்தது நடக்குமாம். வீட்டில் சகல செல்வங்களும் வந்து குவியுமாம். அது மட்டுமல்ல. ஆடி மாதம் முத்து மாரியம்மனை வழிபட்டால், திருஷ்டிகள் விலகி ஓடிவிடுமாம்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. அப்போது வழிபட்டால் நம் வாழ்க்கையே செழிப்பாகி விடும் என்பதால் இந்த மாதம் முழுவதும் சுபகாரியங்கள் தவிர்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.

 

 

 

 

மேலும் உங்களுக்காக...