சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!

Published:

சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி தான். அன்றைய தினம் இரவு முழுவதும் கண்விழித்து இறைவனைத் தொழுது நம் ஆற்றலைப் பெருக்குவது தான் சிவராத்திரியின் நோக்கம். சிவராத்திரியில் பல வகைகள் உண்டு. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

Shiva Parvathi
Shiva Parvathi

சிவனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகமாக உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போய்விடும்.

மோட்சம் கிடைக்க…

சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி. நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருந்தால் 100 அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும். சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.

ஆறு அம்சங்கள்

மாத சிவராத்திரி விரத வழிபாட்டில் ஆறு முக்கிய அம்சங்கள் உள்ளன. வரிசையாகப் பார்ப்போம்.

Sivalinga pooja
Sivalinga pooja

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.

லிங்கத்திற்கு குங்குமம் அணிவிப்பது நல்ல இயல்பையும், நல்ல பலனையும் வழங்கும். நைவேத்தியம் படைப்பது நீண்ட ஆயுளைத் தரும். விருப்பங்களையும் நிறைவேற்றும். தீபமிடுவது செல்வத்தை வழங்கும்.

எண்ணெய் விளக்கேற்றுவது ஞானம் அடைவதைக் குறிக்கும். வெற்றிலை அளிப்பது உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

விதவிதமான சிவராத்திரிகள்

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரிக்கு வருஷ சிவராத்திரி என்ற பெயரும் உண்டு. திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல், இரவு சேர்ந்த 60 நாழிகை (24மணி) யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.

வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி திதி இடம் பெறும் 24 நாட்களும் நித்திய சிவராத்திரி.

Maha Sivarathiri
Maha Sivarathiri

தை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, 13 நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, 14ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி.

மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி.

மேலும் உங்களுக்காக...