பக்தர்களுக்கு உடனடி வரம் கொடுக்கும் திட்டை ஆஞ்சநேயர் கோவில்…உள்ளே நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கு…!

By Sankar Velu

Published:

பக்தர்கள் தங்களது நீண்டநாள் கனவு, கோரிக்கைகள், நோய்கள் அகல தினமும் அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர். பகவான் அவர்களுடைய பக்தியின் சிரத்தைக்கேற்ப அருள் வழங்குகிறார்.

பக்தியே இல்லாதவரையும் காத்து அருள்கிறார். இது தான் பகவானின் கடமை. அப்படி என்றால் கோவிலுக்குப் போவது ஏன் என்று குதர்க்கமான கேள்வி வேண்டாம்.

நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி கடவுளை மட்டும் மனதில் இருத்தி நம் வேண்டுதல்களை அவரிடம் வைத்து வழிபடுவதற்குத் தான் கோவில். இதைப் பிற இடங்களில் செய்ய முடியாது. அப்படியே இருந்தாலும் கோவிலைப் போல ஒரு தெய்வீகமான அமைதி அங்கு இருக்காது. நம் சிந்தனை சிதறி விடும்.

அதனால் தான் அப்போதே நம் முன்னோர்கள் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஊர் ஊருக்குக் கோவில்களைக் கட்டி வைத்தனர். அந்த வகையில் நமது நீண்ட நாள் எண்ணங்கள் ஈடேற திட்டை ஆஞ்சநேயர் அருள்புரிகிறார். வாங்க அவரது ஆலயத்திற்குச் செல்லலாம்.

அமைவிடம்

தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் திட்டை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

விசேஷம்

கோவிலில் நுழையும்போதே, ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல, அர்ச்சகர், நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்தி விடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி, ஆஞ்சநேயரை மனம் உருக துதிக்கிறார்.

Thittai
Aanjaneya

மிக முக்கியமான விஷயமாக, இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நீண்ட நாட்களாக, இருந்து வரும் திருமண பிரச்சனை உடனடியாக தீர்ந்துவிடுகிறது. இது என்னிடம் பல பேர் அங்கே சொன்ன, முற்றிலும் உண்மையான விஷயம்.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக வரம் அளிப்பதில், பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் விளங்குவதால், வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்..!

பிரதிபலன் கருதாத தெய்வம்

அனுமன் தரிசிக்க வெண்ணெய், வெற்றிலை வாங்க முடியவில்லை… வடைமாலை சாற்ற முடியவில்லை என்று வருந்த வேண்;டாம். வசதி வாய்ப்புள்ளவர்கள் இதைச் செய்யலாம்.

மற்றவர்கள் அவருக்குப் பிடித்தமான ஸ்ரீராம ஜெயம் சொல்லி மனதார வணங்கினாலே போதும். அவரது அருள் கிடைக்கும். எதையும் எதிர் பாராத கடவுள். அவர் ராம நாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாகவே திகழ்ந்தார்.

சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணி விடை செய்வதற்காகவே வாழ்ந்து வந்தார். அவ்வளவு அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மை என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார்.

ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடந்தார். கோபத்தில் இலங்கையை எரித்தார். சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்பினார். இத்தகைய அரிய செயல்களை எல்லாம் அவர் எளிதில் செய்தார் என்பது தான் விசேஷம். தற்பெருமை அவரிடம் சிறு துளி அளவு கூட கிடையாது.

நான் ராமனின் சாதாரண தூதன் தான். அவருக்குப் பணிவிடை செய்யவே வந்தேன் என்பார். ராமனின் அருளால் எனக்கு எந்தவிதமான அச்சமோ, மரண பயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்கையில் எனக்கு மரணமே வந்தாலும் அதை வரவேற்கிறேன் என்று சொன்ன பெருந்தகையாளர் அவர்.

Aanjaneyar
Aanjaneyar

ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜ குமாரனாக மூடி சூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப் பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை.

சிரஞ்சீவி

இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர் என்றார்.

நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என ராமன் கேட்க, அனுமன் மிகவும் அடக்கமாக, எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்றார்.

தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் இவர். இவரை வணங்கி இவரது அருளைப் பெறுவோம்.

மேலும் உங்களுக்காக...