முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் தைப்பூசம் சிறப்புக்குரிய விரத நாள். முருக வழிபாடு வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே முருகன் நிறைவேற்றித் தருவார்.
வினைப்பயனால் நாம் எடுத்த இந்தப் பிறவியை ஏற்படக்கூடிய அல்லல்களையும் துன்பங்களையும் மாற்றி அந்த வினையின் வலியைக் குறைத்து நம்மை வாழ்க்கையில் உயர்வடையச் செய்வதுதான் கந்தக்கடவுள் வழிபாடு.
அந்தக் கடவுளுக்கு நாம் விரதம் இருந்து அன்போடு வழிபடக்கூடிய ஒரு உயரிய திருநாள்தான் இந்தத் தைப்பூசம். தைப்பூசத்துக்கு தொடர் விரதம் இருக்க வேண்டுமா? அல்லது அன்றைக்கு மட்டும் இருக்க வேண்டுமான்னு கேட்பாங்க. இது அவரவர் வேண்டுதலைப் பொருத்தது.
பொதுவாக தைப்பூசத்துக்கு மாலை அணிவித்து, பாத யாத்திரை செல்லக்கூடியவர்கள் 30 நாளோ அல்லது 48 நாள் விரதமாக இருப்பாங்க. பாத யாத்திரை போகாதவங்க ஒரே ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பாங்க. பழனிக்குப் பாத யாத்திரை செல்லக்கூடியவர்கள் கார்த்திகை மாதமே மாலை அணிந்து மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தை மாதம் போய் முருகனை வழிபடுவர்.
பலரும் பாத யாத்திரையாக தற்போது நடந்து செல்கின்றனர். தைப்பூசத்து அன்றுதான் முருகனைப் பார்க்கணும்னு இல்ல. அதுக்கு முன்னாடியோ அல்லது பின்னாடியோ 10 நாள் போய் முருக வழிபாட்டைச் செய்து வருவது வழக்கம்.
தைப்பூசத்து அன்று மட்டும் விரதம் இருப்பவர்கள் என்ன செய்வதுன்னு பார்க்கலாமா…
குழந்தை பேறு, திருமணம், நோய் நீங்க, பகை, வியாபார விருத்தி, நினைத்த காரியம் கைகூடாமை ஆகிய வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தைப்பூச விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம்.
விரதத்தில் முடிந்தவர்கள் பட்டினியாக இருக்கலாம். மற்றவர்கள் எளிமையாக பழச்சாறு, மோர் குடிக்கலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் விரதம் இருக்கத் தேவையில்லை. தைப்பூசம் அன்று விரதம் இருக்க முடியாதவர்கள் எளிய வழிபாடு செய்து கொள்ளலாம். பாலபிஷேகம் முக்கியமான வழிபாடு. விரதம் இருப்பவர்கள் பலரும் முருகப்பெருமானுக்குக் காவடி சுமந்து சென்று வழிபடுவர்.
பக்கத்துல இருக்குற முருகர் கோவிலுக்கு அரை லிட்டர் பால் வாங்கிக் கொடுங்க. போய் பாருங்க. அப்படி போக முடியாதவர்கள் வீட்டிலேயே முருகர் விக்ரகத்துக்கு பாலாபிஷேகம் பண்ணலாம். விக்கிரகம் இல்லாதவர்கள் முருகர் படத்துக்கு மாலை அணிவித்து ஒரு டம்பளர் பால் வைத்து அபிஷேகம் பண்ணலாம். வீட்டுல வழிபட சர்க்கரைப் பொங்கல், பாயாசம் என ஏதாவது இனிப்பு ஒன்று செய்து கொள்ளுங்கள்.