பகவான் படியளக்கிறாரா…?! அளவைக்காரருக்குக் கட்டளையிட்ட ஸ்ரீரங்கம் பெருமாள்

Published:

பகவான் எல்லாருக்கும் படி அளக்கிறான் என்று சும்மாவா சொன்னார்கள். யார் யாருக்கெல்லாமோ படி அளக்கிறான். உனக்கு அளக்காமலா போய்விடுவான் என்றும் சொல்வார்கள். அதாவது கஷ்டப்படுபவர்களுக்கும் சரி, மாற்றுத் திறனாளி களுக்கும் சரி. அவரவர் நிலைமைக்கு ஏற்ப பகவான் படி அளப்பார்.

இது கதையல்ல. இப்போதும் ஸ்ரீரங்கத்தில் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார். அதாவது, வருஷத்துக்கு 7 தடவை படி அளக்கிறார் பெருமாள்.

நெல் அளவைத் திருநாள்

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என 7 மாதங்களில் நெல் அளவைத் திருநாள் நடைபெற்று வருகிறது. மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் 7ம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டு அருளப்படுகிறது.

நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி, பூதேவி துணை வரக் கிளம்புகிறார் நம்பெருமாள். ஏன்? இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு, மீதி இருப்பு எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்க்க. அதற்கு எதற்கு தேவியரையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போக வேண்டும்?

துணையுடன் வரும்  நம்பெருமாள்

கணவனின் சரிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று, நமக்கு உணர்த்துவதற்காக வருகிறார். தவிர, தானிய அளவையின்போது, தானிய லெட்சுமி துணை வர வேண்டுமல்லவா? பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்து, ஸ்ரீதேவி, பூதேவியர் இருவரும் பட்டாடை உடுத்தி உடன் வர, பக்தர்கள் புடைசூழ, வெளிப்பிரகாரமான ராஜமகேந்திரன் திருச்சுற்றில் பவனி வருகிறார் நம்பெருமாள்.

ஆர்யபட்டாள் வாசல் வழியே வந்து, செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு, நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப் பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.

அளவைக்காரருக்கு உத்தரவு

செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிச்சாரகம் செய்பவர், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து நம்பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்விக்கப் படுகிறது. பெருமாள் அருகிருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி கார் அளப்பானை அழைக்கிறார். ஸ்தானிகர் குரல் கேட்டு, வருகிறேன்… வருகிறேன் எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர்.

padi
padi

அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதம் ஆன சடாரி சாத்தினாலே, அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர் பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளக்கத் தொடங்குகிறார்.

சரியாக அளந்து போடு

Padi Alakkum Namperumal
Padi Alakkum Namperumal

திருவரங்கம் எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து பெரிய கோயில் எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது.

ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது, நிரவி விட்டு அள… என்று. ஸ்தானிகர்தான்… குரல் கொடுக்கிறார். சரியாக அளந்து போடு என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம்.

திருக்கொட்டாரம்

அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்கொட்டாரத்திலிருந்து தான் எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக்கொட்டாரம் ஒரு பொக்கிஷம்.

அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் தானிய உற்பத்தியும், சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள் எனக் குறிப்பிடுகிறார் தேவஸ்தான அர்ச்சகர் சுந்தர்பட்டர்.

படி அளக்கும் பெருமாள்

paddy measurement
paddy measurement

உலகம் யாவுக்கும் படியளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிவது? அதனால், அதன் பின்னர் 1, 10, 100, 1000, 10000, லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது. தன் நேரடிப் பார்வையில் நெல் அளவை கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து, பூந்தேரில் எழுந்தருளி வீதியுலா வருகிறார், படியளக்கும் பெருமாள் என்கிறார்

மேலும் உங்களுக்காக...