‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்பார்கள். குலதெய்வம் எது என்று தெரியாதவர்களும் முருகப்பெருமானை மனமுருகி வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய பலன்கள் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு உகந்த தினம் சஷ்டி. அதிலும் ஐப்பசியில் வரும் சஷ்டி மகத்தானது. அந்த கந்த சஷ்டி விரதம் இருப்பது குறித்துப் பார்ப்போம்.
இன்று (2.11.2024) கந்தசஷ்டி விரதம் தொடங்குகிறது. இந்த திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குமரன், சூரபத்மனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் கந்தசஷ்டி இந்த வருடம் 2.11.2024 ஆரம்பமாகி 7.11.2024 (வியாழக்கிழமை) அன்று நிறைவு பெறுகிறது.
நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
கந்தசஷ்டி விரதத்தின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர், பழனி போன்ற பிரபலமாக உள்ள முருகன் கோவில்களில் நடைபெறும். சூரசம்ஹாரத்திற்கு பின் முருகனின் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்நிகழ்வைக் காண திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது.
கந்தசஷ்டி விரதம் எப்படி இருக்கணும்னு தெரியுமா? வாங்க. அதையும் பார்த்துவிடுவோம். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும். விரத நாட்களில் அதிகாலையில் துயிலெழுந்து நீராட வேண்டும்.
காலையும், மாலையும் வீட்டில் விளக்கேற்றி மனதார வழிபட வேண்டும். விரத காலங்களில் கந்தசஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, கந்தகுரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். விரத நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது உத்தமம்.
இவ்விரதத்தின்போது 6 நாட்களும் ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்ள வேண்டும். முறைப்படி இந்த விரதம் இருந்தால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம், வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும்.திருமணப் பாக்கியம், நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என எல்லாம் கிடைக்கும். மொத்தத்தில் நிம்மதியும், சந்தோஷமும், உற்சாகமும் வாழ்வில் எப்போதும் இருக்கும்.