ஆடி மாதத்தின் சிறப்பான அம்மனுக்கு உகந்த ஆடிக் கூழ்…! கோவில்களில் வழங்கப்படும் சுவையில் இந்த ஆடி கூழினை வீட்டிலேயே எப்படி செய்வது?

Published:

ஆடி மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கிய மாதமாக உள்ளது. குறிப்பாக ஆன்மீக பக்தர்களுக்கு ஆடி மாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசனம் செய்வது உண்டு. அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில்  அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரளாக அம்மனின் தரிசனத்தை காண்பதற்கு குவிந்து இருப்பதை காணலாம்.

வியக்க வைக்கும் ஆடி வெள்ளியின் மகத்துவமும் சிறப்புகளும்!!!

இது போன்ற விசேஷ நாட்களில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை இவற்றோடு பிரசாதமும் நெய்வேத்தியம் செய்யப்பட்டு அது பக்தர்களுக்கு வழங்கப்படும். இப்படி ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் ஒரு முக்கிய பிரசாதம் தான் ஆடிக் கூழ். சில பக்தர்கள் வீட்டிலேயே கூழ் தயாரித்தும் அம்மன் கோவிலுக்கு வரும் இதர பக்தர்களுக்கு வழங்குவர்.

இந்த கூழானது தமிழர்களின் பாரம்பரிய உணவாகும். நம் முன்னோர்களின் காலை உணவாக இந்த கூழ் தான் இருந்து வந்துள்ளது. இன்றும் பலர் காலை உணவாக கேப்பை, கம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட கூழினையே உண்பதற்கு விரும்புகிறார்கள்.

adikool 1

இந்த கூழ் உடலுக்கு வலு சேர்க்கும். சர்க்கரை நோயினை ஏற்படாமல் தடுத்திட காலை உணவாக கூழினை உண்டு வந்தாலே போதும். மேலும் கூழ் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு. கூழ் செய்வதற்கு கேப்பை முதன்மை உணவுப் பொருளாக உள்ளது. இந்தக் கேப்பையில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.

சூப்பரான ராகி பால் கஞ்சி… உங்களின் ஆறு மாத குழந்தைக்கு அருமையான காலை உணவு!

சத்து நிறைந்த ஆரோக்கியமான இந்த கூழினை தினமும் உண்டு வந்ததால் தான் நம் முன்னோர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அருகில் வராத வண்ணம் ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்துள்ளனர்.

இப்பொழுது இந்த கூழினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

adi kool

ஆடிக் கூழ் செய்ய தேவையான பொருட்கள்:
  • கேப்பை மாவு – ஒரு கப்
  • பச்சரிசி – கால் கப்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • தயிர் – ஒரு கப்
  • உப்பு – தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் – ஆறு
  • பச்சை மிளகாய் – ஒன்று
ஆடிக் கூழ் தயாரிக்கும் முறை:

ஒரு கப் கேப்பை மாவில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து முதல் நாள் இரவே புளிக்க வைக்க வைத்து விட வேண்டும்.

பச்சரிசியை மிக்ஸியில் குருணையாக அடித்து தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி நல்ல கஞ்சி பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும்.

அடி கனமான பாத்திரத்தில் கரைத்து வைத்த கேப்பை மாவினை சேர்த்து கஞ்சி போல் காய்ச்ச வேண்டும். கேப்பை நிறம் மாறி பளபளப்பான நிறம் வரும் வரை காய்ச்சவும்.

கேப்பை இறுகி வந்ததும் இதனுடன் வேக வைத்த அரிசியை சேர்த்து குறைந்த தீயில் வைத்து கட்டியாகும் வரை கிளறவும்.

இப்பொழுது இதனை இறக்கி நன்கு ஆற வைத்து விடவும். 

கூழ் ஆறிய பின் அதனுடன் தயிர் சேர்த்து கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

இந்த கூழில் விருப்பப்பட்டால் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய மாங்காய், அல்லது மோர் மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கூழ் அம்மனை குளிர்விக்கும் உணவாக கருதப்படுகிறது. இதை ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி நாட்களில் நீங்களே வீட்டில் தயார் செய்து உங்கள் பூஜை அறையில் இருக்கும் அம்மனுக்கு வேப்பிலை உடன் படைத்து அதன் பின்னும் உண்ணலாம்…!

மேலும் உங்களுக்காக...