சூப்பரான ராகி பால் கஞ்சி… உங்களின் ஆறு மாத குழந்தைக்கு அருமையான காலை உணவு!

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆன பின்னர் என்ன உணவினை கொடுப்பது என்ற குழப்பங்கள் ஏற்படும். தினமும் ஆரோக்கியமான உணவினை அந்த பிஞ்சுக் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. அப்படிப்பட்ட ஆரோக்கியமான ஒரு காலை உணவு தான் ராகி பால் கஞ்சி…!

ராகியில் அதிக அளவு புரதம் சத்து உள்ளது. கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவாகும். இதில் இரும்புச் சத்தும் அமினோ அமிலங்களும் உள்ளது. குழந்தையின் வயிற்றிற்கு நிறைவான உணவாக ராகி பால் கஞ்சி இருக்கும். ராகி பால் கஞ்சியை கொடுத்து குழந்தையை உறங்க வைத்து விட்டால் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குழந்தை ஆழ்ந்து உறங்குவார்கள் காரணம் இது அந்த அளவுக்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிப்பதற்கு இந்த ராகி பால் கஞ்சி சிறந்த தேர்வு.

images 2 30

ராகி பால் கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:

  • முழு கேப்பை – 1/2 கப்
  • தண்ணீர்
  • கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு

ராகிப் பால் கஞ்சி செய்யும் முறை:

முழு கேப்பையை ஒரு பவுலில் சேர்த்து நான்கு முதல் ஐந்து தடவை நன்கு அலசிக் கொள்ளுங்கள்.

கேப்பையை நன்கு சுத்தம் செய்து முதல் நாள் இரவே அதனை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் ஊற வைத்த கேப்பையை நீரை வடித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

நன்கு சுத்தமான ஒரு வெள்ளை துணியில் அரைத்த கேப்பையை சேர்த்து பாலினை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த பாலினை அடுப்பில் வைத்து கட்டி ஏதும் விடாமல் கிண்டவும். கஞ்சி பதத்திற்கு வரும் வரை கிண்டவும். (குழந்தைக்கு அதிக தண்ணீர் ஓடும்படி இருந்தாலும் ஊட்டி விடுவதில் சிரமம் ஏற்படும். அதேசமயம் மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது ).

விருப்பப்பட்டால் சிறிதளவு இனிப்பு (கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு) சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

குழந்தையின் பார்முலா மில்க் அல்லது தாய்ப்பால் சேர்த்தும் ஊட்டலாம்.

கூடுமானவரை சீனி சேர்ப்பதை தவிர்க்கவும்.

உங்கள் குழந்தை உண்ணும்  அளவை பொறுத்து ராகியின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் குழந்தைக்கு சத்தான எளிமையான ராகி பால் கஞ்சி தயார்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews