தை பொறந்தது… வழி பிறந்தது…. மங்கலம் பொங்குதம்மா….! பொங்கல் வைக்க உகந்த நேரம்!

Published:

வாழ்க்கையில் மனநிறைவாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதலிடம் பிடிப்பது தைப்பொங்கல். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே மார்கழி பிறந்ததுமே நமக்கு பொங்கல் பண்டிகைக்கான ஆயத்த வேலைகள் ஆரம்பித்துவிடும். ஆங்கிலப்புத்தாண்டுக்குப் பிறகு பொங்கல் வேலைகளான வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, சுத்தம் செய்வது என வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும்.

பொங்கல் வந்ததும் மக்களின் உள்ளங்கள் எவ்வளவு சோகங்கள் இருந்தாலும் அன்று மட்டும் புத்துணர்வுடன் புதுப்பொலிவுடன் திகழும். அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனுக்குப் படையல் வைத்து பொங்கல் இட்டு வழிபடும் வழிபாடு எங்கும் களைகட்டும்.

இந்த இனிய தைத்திருநாள் இன்று 15.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

முந்தைய தினமான போகி அன்று நாம் கழிக்கவேண்டிய விஷயங்களைக் கழித்து பெருக்க வேண்டிய நல்விஷயங்களைப் பெருக்கி நம் குலதெய்வத்தை வழிபட்டு இருப்போம்.

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டுபவர் யார் என்றால் அவர் தான் ஆதித்ய பகவான். அவருக்கு நன்றி கூறும் பொருட்டு நாம் கொண்டாடும் திருநாள் தான் இந்த பொங்கல் பண்டிகை.

சூரியன் உதயமாகின்ற அந்த நேரத்தில் பொங்கல் வைப்பது உகந்தம். 6 மணிக்கு சூரிய உதயம் என்றால் நாம் 5 மணிக்கே பொங்கல் வைத்து சூரியன் வரும் நேரத்தில் படையலை வைத்து வழிபட்டால் அது தான் இன்பம்.

இந்த ஆண்டு தை மாதம் நள்ளிரவில் 12.15மணிக்குப் பிறக்கிறது. அப்போது பொங்கல் வைக்க முடியாது. அதனால் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பொங்கல் வைக்க ஆரம்பிப்பதே உத்தமம்.

அதிகாலை 5 மணி முதல் 12 மணி வரை பொங்கல் வைப்பது சிறப்பு. இந்த நேரங்களில் எப்போது உங்களுக்கு சௌகரியமாக உள்ளதோ அந்த நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

Pongal 22
Pongal 23

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை சொல்லலாம். இந்த நேரத்தில் நாம் வைக்கும் பொங்கலுக்குத் தான் சூரிய பொங்கல் என்று பெயர். சூரிய பொங்கல் வைக்க முடியாதவர்கள் காலை 8 மணி முதல் 10 மணி வரை வைக்கலாம்.

அதற்குப் பிறகு தான் பொங்கல் வைக்க முடியும் என்பவர்கள் 11 மணி முதல் 12 மணிக்குள் வைக்கலாம்.

பொங்கல் வைத்து சூரியனை வழிபடும்போது அந்த ஆண்டு முழுவதும் நல்லாருக்கணும்னு ஆதித்ய பகவான்கிட்ட நாம வேண்டிக்கொள்ளலாம். கரும்பு, இஞ்சி, வாழை, நெல் மற்றும் காய்கறி, பழங்கள் என உழவர்களிடம் உள்ள பொருள்கள் அனைத்தையும் வைத்து ஆதித்யபகவானை வழிபடலாம்.

பால் பொங்கல் சர்க்கரைப் பொங்கலாக வைக்க வேண்டும். அடுத்து வெள்ளைப் பொங்கலாக வைக்க வேண்டும். கிராமங்களில் இந்த இரண்டு வகையான பொங்கல் வைத்து சூரியபகவானை வழிபடுவர். அன்று எல்லா காய்கறிகளையும் போட்டு வைக்கும் குழம்பு அத்தனை ருசியாக இருக்கும்.

மறுநாள் மாட்டுப்பொங்கல். இதற்கு மாடு வைத்து இருப்பவர்களுக்குத் தான் பொருந்தும் என மற்றவர்கள் சாமி கும்பிடாமல் இருந்து விட வேண்டாம். அன்று நம் முன்னோர்களை வழிபட ஏற்ற நாள். 16.1.2023 (திங்கள்கிழமை) நம் வீட்டுப் பெரியவங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டும் என்று அவர்களுக்குப் பிடித்த உணவு, பலகாரங்கள் வைத்து வழிபடலாம்.

பெரியவர்கள் மனம் குளிர நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். இந்த வழிபாட்டுக்கு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை உகந்த நேரம். அல்லது மதியம் 12மணிக்கு மேல் படையல் வைத்து வழிபாடு செய்யலாம்.

மறுநாள் 17.1.2023 (திங்கள்கிழமை) அன்று காணும் பொங்கல். இந்த இனிய நாளில் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவர். நாம் பெரியவர்களாக இருந்தால்; பொண்ணுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு ஆசி வழங்கலாம். ஏதாவது ஒரு சின்னப் பரிசாவது கொடுக்கலாம்.

Kaanum Pongal
Kaanum Pongal

சிறியவர்கள் அன்று பெரியவர்களைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. சீடர்கள் தங்கள் குருமார்களிடம் சென்று ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

தை பொறக்கும் நாளை… விடியும் நல்ல வேளை… பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்… அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான்… என மணிரத்னம் இயக்கிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் அசத்தலான ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். அந்த இனிய தருணம் இன்று என்பதால் நாம் அனைவரும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வோம்.

மேலும் உங்களுக்காக...