நவரக்கிரக தோஷங்களை நீக்கும் சமயபுரம் மாரியம்மன்…! பச்சைப் பட்டினி விரதம் இருப்பது ஏன்னு தெரியுமா? ..!!

Published:

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக சமயபுரம் மாரி அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருக்கிறார்.

மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு. மார்ச் 12ஆம் தேதி பச்சைப்பட்டினி விரதத்தை தொடங்குகிறார் சமயபுரம் மாரியம்மன்.

பச்சைப்பட்டினி

Samayapuram Mariamman 1
Samayapuram Mariamman

சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும். ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடம் சமயபுரம். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பச்சைப்பட்டினி இருக்கும் இந்த 28 நாட்களில் இக்கோவிலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கநாதரின் தங்கை சமயபுரம் மாரியம்மன். அண்ணன் ஸ்ரீரங்நாதரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.

தட்சன் யாகத்துக்குச் சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இந்த திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் வந்தது.

ஆயிரம் கண்கள்

மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. .

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரியம்மன் மிகப்பெரிய சுயம்பு திருவுருவமாக, விக்கிரசிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் தங்கதிருமுடியுடன் குங்குமநிற மேனியில் ஜொலிக்கிறார்.

நெற்றியில் வைரபட்டை ஒளிவீச, வைர கம்மல்களும், வைரமூக்குத்தியும், சூரிய, சந்திரனைப் போல் ஜொலித்து, கண்களில் அருளொளிபாவித்து, அன்னைக்கு அன்னையாய், ஆதிமுதல் ஆதாரசக்தியாய் அருள்பாலிக்கிறார்.

நவக்கிரக தோஷம்

அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பௌர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது.

தனிச்சிறப்பு

Samayapuram koil
Samayapuram koil

27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.

இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சி. மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.

உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருக்கிறாள்.

மாரியம்மன் ஆக மாறிய ஆதிபராசக்தி

தேவர்களை இம்சித்த மகிஷாசூரனை புரட்டாசி மாதம் 9 நாட்கள் தவமிருந்து வதம் செய்தார். அன்னை ஆதிபராசக்தி. மகிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரையில் வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் கொண்டு இருக்கிறாள்.

அம்மன் சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்கிறாள். அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வ ரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

பூச்சொரிதல்

பச்சை பட்டினி விரதம் இந்த ஆண்டு வரும் மார்ச் 12 ஆம் தேதி தொடங்குகிறது. இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா வருகிற மார்ச் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது.

அன்று, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.

 

மேலும் உங்களுக்காக...