பழமையிலும் பழமையானவன்…புதுமையிலும் புதுமையானவன்…! அவன் யார்? பாவங்களைப் போக்க எளிய வழி இதுதான்….!

Published:

பனிபெய்யும் இனிய மார்கழி மாதம் நம் அனைவருக்கும் நல்ல தூக்கத்தைத் தரும். ஆனால் அதிகாலையில் தினமும் எழுபவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அதிலும் இந்த மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த மாதத்திலாவது அதிகாலையில் எழுகையில் நம் உடலுக்கும், மனதுக்கும் அது நன்மை பயக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி அதிகாலையில் துயில் எழுந்து இறைவனின் நாமம் சொல்லி தரிசிக்க நம் பாவம் எல்லாம் பொசுங்கி போகும்.

இந்த இனிய நாளில் மார்கழி 9 (24.12.2022) அன்று மாணிக்கவாசகர் அருளிய பாடல் இது.

Markali 9
Markali 9

முன்னைப் பழம்பொருட்கும் என்று தொடங்குகிறது இந்தப் பாடல்.
முன்னைப் பழம்பொருளுக்கும் பழமையானவன் நீ. புதுமையானவருக்கு நீ மிகவும் புதுமையானவன் என இறைவனைப் பற்றி மாணிக்கவாசகர் கூறுகிறார். தற்போதுள்ள சூழலிலும் இந்தப் பாடல் பொருத்தமாக உள்ளது.

ஒரு விஷயம் அதாவது ஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்தால் அது முழுமையாக அழியவும் செய்யாது. அது மீண்டும் புதிதாகப் பிறப்பதுமில்லை. பழசு என்று ஒன்று இருந்தால் அதை வேணாம் என்றால் அது முழுமையாக அழிந்து விடாது. உதாரணத்திற்கு தங்கம், மண்பானை, பஞ்சிலிருந்து ஆடை ஆகியவற்றின் வெவ்வேறு வடிவங்களைச் சொல்லலாம். அதன் மூலம் இதுவாகத் தான் இருக்கும்.

மண்பானையை எடுத்துக் கொண்டால் மண் ஒன்று தான். அதிலிருந்து உருவாகும் விதவிதமான பானைகள் தான் வேறு. அதே போல தங்கம் ஒன்று தான். அதிலிருந்து உருவாகும் விதவிதமான ஆபரணங்கள் தான் வேறு. பஞ்சு ஒன்று தான். அதிலிருந்து ஆடை நெய்து கர்சீப், சட்டை, டவுசர், வேட்டி, சேலை, பாவாடை, நைட்டி என விதவிதமான ஆடைகள் உருவாகின்றன.

அதே போல புதுசாகவும் எதுவும் தோன்றாது. பழசு தான் புதுசாக பரிணமளிக்கும். அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கம்பம்புல், கேப்பை, கேழ்வரகு, திணை என சத்தான உணவு வகைகளை சாப்பிட்டார்கள்.

இப்போது 80….90 வருஷத்துக்கு முன்னார்கள் என்ன சாப்பிட்டார்களோ தற்போது அவற்றை இளைஞர்கள் சாப்பிடுகிறார்கள். அப்போது ரொம்ப வசதியானவங்க வீட்டுல தான் அரிசி சோறு. அப்போது அதை நெல்லு சோறு என்பர்.

நாளாக நாளாக அரிசி எல்லோரும் சாப்பிடக்கூடிய உணவாக மாறியது. இப்போது பழைய உணவு தான் சத்து என திணை, குதிரை வாலி, கம்பு, ராகி, கேப்பை கழி என தேடிப்பிடித்து சாப்பிடுகிறோம். புதிதாக இன்னொரு இடத்தைத் தேடிப் போகவில்லை. எதுவுமே புதிதாகத் தோன்றுவதில்லை. ஆக, எங்கோ அது பழைய விஷயமாக இருந்து புது வடிவமாகி வருகிறது.

இறைவன் பழமைக்கு பழமையாய், புதுமைக்கு புதுமையாய் ஆனவன்.

அப்பேர்ப்பட்ட இறைவனின் சிறப்பம்சங்களை உணர்ந்து அவரை நாடிச் செல்ல வேண்டும் என்பதையே இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

ஆண்டாள் இந்த அற்புதமான நாளில் தூமணி மாடத்து என்று தொடங்கும் பாடலைப் பாடுகிறார்.

Thiruvembavai 9
Thiruvembavai 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய என்று ஆரம்பிக்கிறார். இயற்கையா…அழகா…அந்த வீட்டின் நிலையை நமக்கு சொல்கிறார். கடைசியில் தோழியை எழுப்புகிறார்.

கடவுளின் நாமத்தைக் கேட்காத காதும், சொல்லாத வாயும் செவிடு, ஊமை என்கிறார். என்ன உன் மகள் செவிடா….ஊமையா..என கேட்கிறார். எனக்கு நாமம் சொல்லத் தெரியாது என்று சொல்ல முடியாது. தெரிஞ்சதை சொல்லு என்கிறார். நாமம் என்பது தெரிந்தால் தான் இந்தப் பிறவியின் சாபம் நீங்கும் என ஆண்டாள் இந்தப் பாடலில் வலியுறுத்துகிறார்.

Vedan Valmiki
Vedan Valmiki

வேடவன் வால்மீகியான கதையில் வேடன் தனக்குச் சொல்ல வராத ராம நாமத்தைச் சொல்லி தன் பாவங்களைக் கழுவுவான். எப்படி சொல்வான் என்றால் நாரதரின் அறிவுரையின்படி மரா மரம் என்ற மரத்தின் பெயரையே திரும்ப திரும்ப சொல்வான்.

அதுவே ராம நாமம் ஆனது. அது போல நமக்கு இறைவனின் பெயரையே சொல்ல வராவிட்டாலும் அதற்கான முயற்சி செய்து சொன்னால் தான் அது பாவத்தைப் போக்கும். இல்லாவிட்டால் பாவம் போக்க வழியே இல்லை என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

மேலும் உங்களுக்காக...